கோவையை நச்சுக் காடாக மாற்றுவதா? ரூ.450 கோடி குப்பை எரி உலை திட்டத்தைக் கைவிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

கோவையை குப்பை எரி உலை திட்டத்தின் மூலம் நச்சுக்காடாக மாற்ற தமிழக அரசு துடிப்பதை அனுமதிக்க முடியாது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ்
கோப்புப்படம்
Published on: 

சென்னை,

கோவை மாநகரத்தை நச்சுக்காடாக்கும் ரூ.450 கோடி குப்பை எரி உலை திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

கோவை மாநகர எல்லைக்குட்பட்ட வெள்ளலூரில் தினமும் 1,200 டன் குப்பைகளை எரித்து மின்சாரம் தயாரிக்கும் ஆலையை அமைப்பதற்கான சுற்றுச்சூழல் சீரழிவுத் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரியுள்ளது. இந்தியாவில் வாழ்வதற்கு உகந்த நகரங்களில் ஒன்றாகக் கருதப்படும் கோவை மாநகரத்தை நச்சுக்காடாக்கும் நோக்குடன் இத்திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசும், கோவை மாநகராட்சியும் துடிப்பது கண்டிக்கத்தக்கது.

2025-ம் ஆண்டில் கோவை வெள்ளலூர் குப்பை எரி உலை திட்டம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே அத்திட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது. உள்ளூர் மக்களும், அங்குள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளும் கடந்த இரு ஆண்டுகளாக இந்தத் திட்டத்தை எதிர்த்து வரும் நிலையில், அதைப் பற்றிக் கவலைப்படாத தமிழக அரசு, இப்போது ஒப்பந்தப்புள்ளிகளை கோரியுள்ளது. ரூ.450 கோடியில் தினமும் 1,200 டன் குப்பைகளை எரித்து 18 முதல் 20 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கான இத்திட்டத்திற்காக வரும் 25-ம் தேதி வரை ஒப்பந்தப்புள்ளிகளை தாக்கல் செய்யலாம்; அவை வரும் 26-ம் தேதி திறக்கப்பட்டு ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்படுவார் என்று தமிழக அரசும், கோவை மாநகராட்சியும் அறிவித்துள்ளது.

குப்பையை எரித்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு பொருத்தமற்றது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். அதனால் தான் வடசென்னை கொடுங்கையூர், தென்சென்னை பெருங்குடி, செங்கல்பட்டு மாவட்டம் கீரப்பாக்கம், சேலம் ஜாகிர் அம்மாபாளையம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் குப்பை எரி உலைகள் அமைக்கும் திட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி எதிர்த்து வருகிறது. குறிப்பாக கோவையில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது அம்மாநகரத்தை நச்சுக்காடக மாற்றி விடும்.

கோவை மாநகராட்சிக்காக 2025-ம் ஆண்டில் இத்திட்டம் முதலில் அறிவிக்கப்பட்டபோது, அதன் மதிப்பு ரூ.100 கோடியாக இருந்தது. தினமும் 300 டன் குப்பைகளை எரித்து 5 முதல் 6 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பது தான் திட்ட இலக்காக இருந்தது. ஆனால், அதைப் படிப்படியாக உயர்த்தி இப்போது ரூ.450 கோடியில் 1,200 டன் குப்பைகளை எரித்து 20 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் குப்பை எரி உலை திட்டமாக விரிவாக்கப்பட்டுள்ளது.

குப்பை எரி உலைத் திட்டத்தைக் கொண்டு வந்தது முந்தைய திமுக அரசுதான். திமுக ஆட்சிக் காலத்தில் கடந்த பிப்ரவரி மாதத்திலேயே இதற்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன. ஆனால், மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாகவும், ஒப்பந்ததாரர்கள் எவரும் முன்வராததாலும் அந்த முயற்சி கைவிடப்பட்டது. அதன்பின் ஏப்ரல், ஜுலை, ஆகஸ்ட், செப்டம்பர் என பலமுறை ஒப்பந்தப்புள்ளிகளை தாக்கல் செய்ய கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. ஆனால், ஒவ்வொரு முறையும் மக்கள் எதிர்ப்பால் இந்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், திமுக கொண்டு வந்த பேரழிவுத் திட்டத்தை செயல்படுத்த தவெக அரசும் துடிப்பது ஏன்? என்பதுதான் பாமகவின் வினா.

இந்தத் திட்டத்திற்காக கோவை மாநகராட்சியிலிருந்து மட்டும் தினமும் 760 டன் குப்பைகள் கொண்டு வந்து எரிக்கப்படும். திருப்பூர் மாநகராட்சி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலிருந்தும் குப்பைகள் கொண்டு வந்து எரிக்கப்படும். இவற்றில் 60% ஈரக்கழிவுகள் இருப்பதால், அவை கொண்டு வரப்படும் பாதை நெடுகிலும் துர்நாற்றம், சுற்றுச்சூழல் சீர்கேடு, நோய்ப்பரவல் உள்ளிட்ட கேடுகளை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி, இந்த ஆலைக்காக தினமும் 3 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இதில் பெரும்பகுதி நிலத்திலிருந்துதான் எடுக்கப்படும் என்பதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும்.

மின்சார உற்பத்தி தொழில் நுட்பங்களில் மிகவும் மாசுபடுத்தக்கூடியது குப்பை எரி உலைதான். நிலக்கரி அனல்மின் நிலையத்தை விட 28 மடங்கு டையாக்சின், 3 மடங்கு நைட்ரஜன் ஆக்சைடு, 14 மடங்கு அதிக பாதரசம், 6 மடங்கு சல்பர் டையாக்சைடு, இரண்டரை மடங்கு கரியமிலவாயு ஆகிய மாசுக்கள் குப்பை எரி உலையில் இருந்து வெளியாகின்றன. இந்த நச்சு ரசாயனங்களால் புற்றுநோய், இருதய நோய்கள், மூச்சுக்குழல் நோய்கள், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். தோல்நோய், ஈரல் பாதிப்பு, ஆஸ்துமா என பல கேடுகளுக்கு குப்பை எரிப்பு வழிவகுக்கும். குழந்தைகளும் வயதானவர்களும் அதிகம் பாதிக்கப்படுவார்கள். காற்று மாசு மட்டுமல்லாமல், எரிஉலை சாம்பலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. போபால் நகரில் விஷவாயு கசிவால் ஒரே நாளில் ஏற்பட்ட பாதிப்புகள் குப்பை எரி உலைகளால் படிப்படியாக ஏற்படும் ஆபத்து உள்ளது.

அதனால் தான் உலகின் வளர்ந்த நாடுகள் பலவும் இத்திட்டத்திற்கு தடை விதித்துள்ளன. இந்தியத் தலைநகர் டெல்லியில் தினமும் 6,550 டன் குப்பைகளை எரிக்கும் 4 எரி உலைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் அங்குள்ள மக்களுக்கு கடுமையான உடல் நல பாதிப்புகள் ஏற்படுவதாகக் கூறி அவற்றை மூட வேண்டும் என்று போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் தோல்வியடைந்த இந்தத் திட்டத்தை ஊழல் செய்யும் நோக்குடன் தான் திமுக அரசு தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தது. தமிழ்நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த தவெகவும், திமுக வகுத்த அழிவுப்பாதையில் பயணிப்பது ஏன்? இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால், திமுகவின் ஊழல் சகாப்தத்தை தவெகவும் தொடர்வதாகவே பார்க்கப்படும்.

தமிழ்நாட்டில் சூழலியல் செழுமைமிக்க நகரங்களில் கோவையும் ஒன்று. அமைதியான சூழலில், தூயக் காற்றுடன் கூடிய வாழ்க்கையை வாழ விரும்புவோர் அனைவரும் அதற்காக தேர்ந்தெடுக்கும் நகரம் கோவையாகத் தான் இருக்கும். ஆசியாவின் 64 முக்கிய நகரங்களை தேர்வு செய்து, அவற்றில் வாழத்தகுந்த நகரம் எது? என்று நடத்தப்பட்ட ஆய்வில் கோவை மாநகரம் தான் முதலிடம் பிடித்தது. இத்தகைய சிறப்புமிக்க நகரை குப்பை எரி உலை திட்டத்தின் மூலம் நச்சுக்காடாக மாற்ற தமிழக அரசு துடிப்பதை அனுமதிக்க முடியாது.

கோவை வெள்ளலூரில் மலை போல குப்பை குவிந்து கிடப்பதால் மக்கள் பல கேடுகளை அனுபவித்து வருகின்றனர். அந்தக் குப்பைகளை அங்கிருந்து அகற்ற வேண்டும் என 2018-ம் ஆண்டிலேயே தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆணையிட்டிருந்த நிலையில், அதற்கு எதிரான நிலைப்பாட்டை அரசு எடுக்கக் கூடாது.

மாறாக, பசுமைத் தீர்ப்பாயத்தின் ஆணைப்படி, கோவை வெள்ளலூரில் உள்ள குப்பைக் கிடங்கு அகற்றப் பட வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு ஆணையிட்டவாறு வீடுகள் மற்றும் நிறுவனங்களில் இருந்து கழிவுகளை ஈரமான குப்பை, உலர்ந்த குப்பை, சுகாதாரக் கழிவுகள், சிறப்புக் கவனம் தேவைப்படும் கழிவுகள் என 4 வகைகளாகப் பிரித்து சேகரிக்கும் சேகரிக்கப்படும் கழிவுகளை மத்திய அரசின் 2026-ம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை விதிகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும். இதை செய்ய மறுத்தால் கோவை மாவட்ட மக்களைத் திரட்டி மாபெரும் மக்கள்திரள் போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X