வாட்டி எடுக்கும் குளிர் அலை; ஊட்டியில் 4.4 டிகிரியாக குறைந்த வெப்பநிலை

தாழ்வான பகுதிகளில், அதிகாலை நேரங்களில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது.
வாட்டி எடுக்கும் குளிர் அலை; ஊட்டியில் 4.4 டிகிரியாக குறைந்த வெப்பநிலை
Published on: 

நீலகிரி,

நீலகிரியை கடும் குளிர் அலை தாக்கியுள்ளது. ஊட்டியில் குறைந்தபட்ச வெப்பநிலை 4.4 டிகிரியாக குறைந்துள்ளது.

குளிர் அலை

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கடும் குளிர் வாட்டி எடுத்து வருகிறது. மாவட்டத்தை தாக்கிய குளிர் அலையால் அங்கு இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பிரபல சுற்றுலா தளமான ஊட்டியில், வெப்பநிலை இன்று 4.4 டிகிரி செல்சியல் அளவிற்கு குறைந்தது.

வெண்பனி

குறிப்பாக கந்தல், கிளென்மார்கன் மற்றும் தலைகுந்தா போன்ற தாழ்வான பகுதிகளில், அதிகாலை நேரங்களில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. அங்குள்ள நிலப்பரப்பு வெண்பனியால் போர்த்தப்பட்டது போல் காட்சியளிக்கிறது.

பனிப்பொழிவில் இருந்து புல்வெளிகளைப் பாதுகாக்க, ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள பணியாளர்கள், அதிகாலை நேரங்களில் புற்களின் மீது தண்ணீர் தெளித்து பனிப்படலத்தை நீக்கி வருகின்றனர்.

சூடுபிடிக்கும் வியாபாரம்

இதற்கிடையில், வெப்பநிலை குறைந்ததால் சாலையோர வியாபாரிகளுக்கு வியாபாரம் சூடுபிடித்துள்ளது. கடும் குளிரில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள, உள்ளூர் மக்களும் சுற்றுலா பயணிகளும் கம்பளி தொப்பிகள், கையுறைகள் மற்றும் குளிர்கால ஆடைகளை அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.

புகைப்படக் கலைஞர்கள்

அதே சமயம், பனியால் மூடப்பட்ட அழகிய புல்வெளிகள் இயற்கை ஆர்வலர்களை அதிக அளவில் ஈர்த்து வருகிறது. அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து ஏராளமான புகைப்படக் கலைஞர்கள், குளிர்கால நிகழ்வைப் படம்பிடிப்பதற்காக நீலகிரியில் குவிந்து வருகின்றனர்.

மேலும், உணவைத் தேடி பனி மூடிய புல்வெளிகளுக்கு வரும் உள்ளூர் நீலகிரிப் பறவைகள் மற்றும் உள்நாட்டு வலசைப் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக விலங்கியல் நிபுணர்கள் மற்றும் பறவை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

X