நாமக்கல் மாவட்டத்தில்நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்கலெக்டர் உமா உத்தரவு

நாமக்கல் மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு கலெக்டர் உமா உத்தரவிட்டு உள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில்நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்கலெக்டர் உமா உத்தரவு
Published on

நாமக்கல் மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு கலெக்டர் உமா உத்தரவிட்டு உள்ளார்.

ஆலோசனை கூட்டம்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பல்வேறு துறை அலுவலர்களுடன் வடகிழக்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் உமா தலைமை தாங்கி பேசியதாவது:-

பொதுப்பணித்துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையினர் மழைநீர் செல்ல கூடிய கால்வாய்களை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும். ஏரி, குளம், வரத்து வாய்க்கால்கள், நீர் நிலைகளில் உள்ள தடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை நீக்க வேண்டும். மழைநீர் கால்வாய்கள் மற்றும் நீர் வெளியேற்றும் அமைப்புகளை ஏற்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வரும் துறையினர் தங்கள் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.

காய்ச்சல் முகாம்கள்

சுகாதாரத்துறையினர் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்துகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நடமாடும் மருத்துவக்குழுவினர் மற்றும் அவசர ஊர்தி வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தற்போது காய்ச்சல் முகாம்கள் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையிலான சித்த மருத்துவ நிலவேம்பு கசாயம் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.

உள்ளாட்சி நிர்வாகங்கள் மழை காலங்களில் குடிநீரை குளோரினேசன் செய்து வழங்க வேண்டும். கால்நடைத்துறையினர் கால்நடைகளுக்கு தேவையான மருந்துகளை தேவையான அளவு இருப்பு வைக்க வேண்டும். வருவாய்துறையினர் நிவாரண முகாம்களின் பட்டியலை தயார் நிலையில் வைத்திருப்பதோடு, மாற்று இடங்களையும் அடையாளம் கண்டு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அந்த இடங்களில் அடிப்படை வசதிகள் உள்ளனவா? என்று ஆய்வு செய்ய வேண்டும்.

தீயணைப்புத் துறையின் சார்பில் ஆற்றோரங்கள் மற்றும் வெள்ள நீரினால் பாதிக்கப்பட கூடிய இடங்களில் அவசர கால செயல்பாடு குறித்த ஒத்திகை நடத்த வேண்டும். அனைத்துத்துறை அலுவலர்களும் இணைந்து வடகிழக்கு பருவமழை காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் தன்னார்வத்துடன் பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் சுமன், உதவி கலெக்டர்கள் சரவணன், சுகந்தி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மாதவன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com