கொரோனா தாக்கம் அதிகரிப்பு: பொதுமக்கள் 2 தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்

கொரோனா தாக்கம் அதிகரிப்பு: பொதுமக்கள் 2 தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்
கொரோனா தாக்கம் அதிகரிப்பு: பொதுமக்கள் 2 தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்
Published on

கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவதால், இதுவரை தடுப்பூசி போட்டு கொள்ளாத பொதுமக்கள் 2 தவணை தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

6 பேருக்கு கொரோனா

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 6 நபர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா நோய்த்தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது.

எனவே கொரோனா தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும். இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டாலும், உயிரிழப்போ, கடுமையான பாதிப்போ ஏற்படுத்துவதில்லை. எனவே இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பொதுமக்கள் கண்டிப்பாக 2 தவணை தடுப்பூசியையும் போட்டுக்கொள்ளவேண்டும்.

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தமுள்ள 15,15,000 நபர்களில் 12,84,532 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 10,25,473 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் போடப்பட்டு உள்ளது. கொரோனா முதல் அலை வந்தபோது பய உணர்வோடு அரசு அறிவித்த அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டதால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.

தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்

இரண்டாம் அலையின் போது அரசு பலமுறை எச்சரித்தும் பொதுமக்கள் முககவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பதில் அலட்சியம் காட்டியதால் அதிக உயிரிழப்பும், பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டது.

எனவே, கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர்களுக்கும், உறவினர்கள், நண்பர்களுக்கும் கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை எடுத்துரைத்து அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். மேலும் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com