

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி குறித்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது :-
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் விபரங்களை இணைப்பது தொடர்பாக உரிய சட்ட திருத்தத்தினை கொண்டு வந்துள்ளது.எனவே வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலுடன் தன் விருப்பத்தின் அடிப்படையில் ஆதார் எண்ணை இணைப்பதற்காக ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட படிவம்-6பி -ஐ வாக்காளர் அலுவலர்கள் மூலமாக உதவி கலெக்டர், தாசில்தார் அலுவலகங்களில் அளிக்கலாம்.
மேலும், புதிதாக பெயர் சேர்க்க படிவம் -6, பெயர் நீக்கம் செய்ய படிவம்-7, திருத்தங்கள் மற்றும் முகவரி மாற்றம் செய்ய படிவம்-8 ஆகிய படிவங்களை உதவி கலெக்டர், தாசில்தார் அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களுக்கு சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அவர் அரசியல் கட்சியினரிடம் ஆதார் எண்ணை இணைப்பதற்கான படிவத்தை வழங்கினார். இந்த கூட்டத்தில் உதவி கலெக்டர் மஞ்சுளா மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.