வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள் வெற்றியாளர்களாக உருவாக முடியும் தேசிய நூலக வார விழாவில் கலெக்டர் சாந்தி பேச்சு

வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள் வெற்றியாளர்களாக உருவாக முடியும் தேசிய நூலக வார விழாவில் கலெக்டர் சாந்தி பேச்சு
Published on

வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள் வெற்றியாளர்களாக உருவாக முடியும் என்று தர்மபுரியில் நடந்த தேசிய நூலக வார விழாவில் கலெக்டர் சாந்தி பேசினார்.

தேசிய நூலக வார விழா

தர்மபுரி மாவட்ட மைய நூலகத்தின் வாசகர் வட்டம் மற்றும் தர்மபுரி மிட்-டவுன் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய 32-வது வார வாசிப்போம், நேசிப்போம் பயிலரங்க நிறைவு விழா, புத்தக கண்காட்சி தொடக்க விழா மற்றும் 55-வது தேசிய நூலக வார விழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி தேசிய நூலக வார விழா புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

பின்னர் 32 வார வாசிப்போம், நேசிப்போம் பயிலரங்கில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில், தற்போதைய கால கட்டத்தில் வாசிப்பு பழக்கம் அரிதாகி வருகிறது. அரசு பணி, மருத்துவம், தொழில் துறைகளில் வெற்றியாளர்களுக்கு சுறுசுறுப்பு, விடாமுயற்சி, நம்பிக்கை போன்ற பல்வேறு சிறப்புகள் இருக்கும். இவற்றை எல்லாம் விட நிச்சயம் வாசிப்பு பழக்கம் அதிகமாக இருக்கும். அத்தகைய வாசிப்பு பழக்கம் அதிகம் உள்ளவர்கள் வெற்றியாளர்களாக உருவாக முடியும்.

137 நூலகங்கள்

இதேபோல அனைத்து மாணவ, மாணவிகளும் தொடர்ந்து வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் ஒரு மாவட்ட மைய நூலகமும், 6 முழுநேர நூலகங்களும், 27 கிளை நூலகங்களும், 69 ஊர்புற நூலகங்களும், 33 பகுதிநேர நூலகங்களும், ஒரு நடமாடும் நூலகமும் என மொத்தம் 137 நூலகங்கள் உள்ளன என்று பேசினார்.

விழாவில் 32 வார வாசிப்போம், நேசிப்போம் பயிலரங்கில் பங்கேற்ற 22 மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். மேலும் கலெக்டரின் விருப்புரிமை நிதியில் இருந்து ரூ.46 ஆயிரம் மதிப்பிலான புதிய மெய்நிகர் தொழில்நுட்ப கருவியை தர்மபுரி மாவட்ட மைய நூலகத்திற்கு வழங்கினார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நூலக அலுவலர் தனலட்சுமி, தகடூர் புத்தகப் பேரவை செயலாளர் டாக்டர் செந்தில், தாசில்தார் ராஜராஜன், நெடுஞ்சாலைத்துறை தனி தாசில்தார் அதியமான், வாசகர் வட்ட தலைவர் ராஜசேகரன், அரசு கலைக்கல்லூரி உதவிப் பேராசிரியர் சிவப்பிரகாசம், தலைமை ஆசிரியர் பழனி, ரோட்டரி மிட்டவுன் தலைவர் சரவணன், ரோட்டரி துணை ஆளுநர் பாலாஜி, செயலாளர் இளவரசன், பொருளாளர் வீரராகவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் முதல் நிலை நூலகர் மாதேஸ்வரன் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com