அரசு பள்ளிகளில்மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு வாகன பிரசாரம்கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்

அரசு பள்ளிகளில்மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு வாகன பிரசாரம்கலெக்டர் ஸ்ரேயா சிங் தொடங்கி வைத்தார்
Published on

நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் விழிப்புணர்வு வாகன பிரசாரத்தை கலெக்டர் ஸ்ரேயா சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு வாகன பிரசாரம்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்போம், எதிர்காலத்தை வளமாக்குவோம் எனும் தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் தனியாருக்கு இணையாக பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம், இல்லம் தேடி கல்வித்திட்டம், காலை உணவு திட்டம், வினாடி- வினா போட்டிகள், இலக்கிய ஆர்வத்தை வளர்க்க பேச்சு, கட்டுரை போட்டிகள், அரசியல் சாசனம் வலியுறுத்தும் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் வானவில் மன்றம், ஆட்டக்கலைகள், இசை, நாடகம் ஓவியம் உள்ளிட்ட அனைத்து கலைகளிலும் பயிற்சி, பள்ளி அளவில் தொடங்கி மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள், ஆண்டுதோறும் மாநில அளவிலான கலைத் திருவிழா, சிறார் இலக்கிய திருவிழா, விளையாட்டு போட்டிகள், வானவில் மன்றப் போட்டிகள், வினாடி வினா ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாணவர் சேர்க்கை தொடக்கம்

இந்த திட்டங்கள் பொதுமக்களை சென்றடையும் வகையில் 3 பிரசார வாகனங்கள் 5 ஒன்றியத்திற்கு ஒரு வாகனம் வீதம் மாவட்டம் முழுவதும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளன. இவ்வாகனங்கள் மூலம் வருகிற 28-ந் தேதி வரை விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படும். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் இந்த கல்வி ஆண்டில் தற்போதே மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) பாலசுப்பிரமணி, உதவி திட்ட அலுவலர் குமார் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com