'பாரத்நெட்' திட்டப்பணிகளுக்கான உபகரணங்களை திருடினால் குற்றவியல் நடவடிக்கை; கலெக்டர் எச்சரிக்கை

‘பாரத்நெட்' திட்டப்பணிகளுக்கான உபகரணங்களை திருடினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஷஜீவனா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Published on

தேனி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும், 'பாரத்நெட்' திட்டத்தின் கீழ் இணையதள இணைப்பு வழங்குவதற்கான திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. சில இடங்களில் இந்த திட்டப் பணிகளுக்கான உபகரணங்கள் திருடு போய்விட்டன. சில இடங்களில் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா இந்த விவகாரம் தொடர்பாக ஒரு செய்திக்குறிப்பு நேற்று வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளிலும், இணையதள வசதி வழங்கும் 'பாரத்நெட்' திட்டமானது, தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET) மூலம் தற்போது முழு வீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இணையதள இணைப்பு வழங்கும் பணியானது வருகிற செப்டம்பர் மாதம் முதல் தொடங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கண்ணாடி இழை இணைப்பானது 85 சதவீதம் மின்கம்பங்கள் மூலமாகவும், 15 சதவீதம் தரைவழியாகவும் இணைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கான யு.பி.எஸ்., ரேக் உள்ளிட்ட உபகரணங்கள், ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம ஊராட்சி சேவை மையம் அல்லது அரசு கட்டிடத்தில் நிறுவப்பட்டு வருகிறது. இந்த உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ள அறையானது சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரால் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்துக்கான உபகரணங்களை பாதுகாத்திடவும். தடையில்லா மின் வசதியை உறுதி செய்திடவும், உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ள அறையில் வேறு தேவையற்ற பொருட்கள் வைக்கப்படாமல் இருப்பதை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகள் சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி செயலாளர்களால் கண்காணிக்கப்பட உள்ளது. இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் போது, ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் வசிக்கும் மக்கள் அனைவரும் இணையதள வசதிகளை பெற முடியும். ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள இத்தகைய மையங்களில் பொருத்தப்பட்டுள்ள மின்கலம், யு.பி.எஸ். மற்றும் கண்ணாடி இழை உள்ளிட்ட உபகரணங்கள் யாவும் அரசின் உடைமைகளாகும்.இந்த உபகரணங்களை சேதப்படுத்தும் அல்லது திருடும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com