

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் திடீர் ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர், மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறுகையில், மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் பொதுத் தேர்வை எதிர்கொண்டு நல்ல மதிப்பெண்கள் பெற பாடத்தை புரிந்து படிக்க வேண்டும். புத்தகத்துடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும். தேவையற்ற பொழுதுபோக்குகளில் ஈடுபட கூடாது. மாணவர்கள் அனைவரிடமும் ஒழுக்கத்துடன் நடக்க வேண்டும்.
சிறு வயது முதலே நல்லெண்ணம் உடையவராக திகழ வேண்டும் என்றார். மேலும் பள்ளி கல்வியின் அவசியம் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதேபோல் திருவந்திபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் அருண்தம்புராஜ், அங்கு மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது பள்ளி தலைமை ஆசிரியர்கள் உடனிருந்தனர்.