பாபநாசம், காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கலெக்டர் ஆய்வு

காணி பழங்குடியின மக்களை கலெக்டர் நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
 பாபநாசம், காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் கலெக்டர் ஆய்வு
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றில் துணிகள் கொட்டப்படுவதாலும், பல் வேறு இடங்களில் கழிவுநீர் கலப்பதாலும் மாசடைகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட கலெக்டர் ஆனந்த மோகன் தாமிரபரணி ஆறு மாசடையக்கூடிய பகுதிகளான பாபநாசம் கோவில், காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், "தாமிரபரணி ஆற்றில் கழிவுகளை வீசுவது குற்றம். ஆற்றில் கழிவுகளை வீசுகிறவர்களுக்கு நகராட்சி மூலமாக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் பக்தர்கள் ஏராளமானோர் கோவிலுக்கு வருகின்றனர். அவர்களின் நம்பிக்கையையும் பாதுகாத்து ஆற்றையும் பாதுகாப்போம். தாமிரபரணியை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்" என்றார்.

காணிகுடியிருப்பு

முன்னதாக பாபநாசம் காரையாறு சின்ன மயிலாறு காணி பழங்குடியின குடியிருப்பு பகுதிக்கு சென்று கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு காணி பழங்குடியின மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று 125 மீட்டர் நீளத்தில் ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் புதிய மேம்பால கட்டுமான பணிகளை பார்வையிட்டார். கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து காணி பழங்குடியின மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் தலா ரூ.5.11 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வரும் 19 குடியிருப்புகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார். பாபநாசம் மேலணை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கி பயிலும் சுமார் 90 மாணவ, மாணவிகளுக்கு கம்பளி, சீருடைகள். நோட்டு புத்தகங்கள், படுக்கை விரிப்புகள், புத்தகப்பைகள், பாய்கள், மழை கோட், காலணிகள், காலுறைகள் போன்றவற்றை கலெக்டர் வழங்கினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com