

ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட பழைய கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் கலெக்டர் சங்கர்லால் குமாவத் தலைமையில், டி.ஆர்.ஓ. காமாட்சி கணேசன் முன்னிலையில் குறைதீர் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில், கலெக்டர் மனுக்களை பெற்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். தகுதியுள்ள பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. அதன்பின் புதிய அலுவலகத்திற்கு கலெக்டர் ரோட்டில் நடந்து சென்றார்.
அப்போது பார்வை குறைபாடுடைய கடலாடியை சேர்ந்த ஆறுமுகம் (வயது 48) என்பவர் எதிரே தடுமாறியபடி நடந்து வந்தார். அவரிடம் சென்று மனு கொடுக்க வேண்டுமா? என கலெக்டர் கேட்டுள்ளார். ஆனால், நீங்கள் யார் கலெக்டரிடம் தான் மனு தருவேன் என்று அவர் கூறியுள்ளார்.
அப்போது அருகே இருந்தவர்கள் இவர் தான் கலெக்டர் என்றனர். இதனை தொடர்ந்து, தனக்கு பார்வை குறைபாடு உள்ளது என்றும் தொழில் தொடங்க கடன் வழங்க வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு, ஒரு வங்கி மூலம் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவருக்கு கலெக்டர் ஆறுதல் கூறினார்.