தகுதியான மாணவிகள் யாரும் விடுபடாமல் புதுமைப்பெண் திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்த வேண்டும் கலெக்டர் பழனி உத்தரவு

தகுதியான மாணவிகள் யாரும் விடுபடாமல் புதுமைப்பெண் திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்த வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் பழனி உத்தரவிட்டுள்ளார்.
தகுதியான மாணவிகள் யாரும் விடுபடாமல் புதுமைப்பெண் திட்டத்தை சிறப்பான முறையில் செயல்படுத்த வேண்டும் கலெக்டர் பழனி உத்தரவு
Published on

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருவது தொடர்பான கலந்தாலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஊக்கத்தொகை

விழுப்புரம் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் முதல்கட்டமாக 2022 செப்டம்பர் முதல் 2023 மே மாதம் வரை 56 கல்லூரிகளை சேர்ந்த 2, 3 மற்றும் 4-ம் ஆண்டுகளில் படிக்கும் 4,158 மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 என ரூ.2 கோடியே 8 லட்சத்து 70 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. 2-ம் கட்டமாக 72 கல்லூரிகளில் படிக்கும் 3,099 முதலாமாண்டு மற்றும் விடுபட்ட மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 என அவர்களது வங்கி கணக்கில் ரூ.1 கோடியே 54 லட்சத்து 95 ஆயிரம் ஊக்கத்தொகையாக செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் இத்திட்டத்தின்கீழ் 2,3 மற்றும் 4-ம் ஆண்டுகளில் படிக்கும் முதல்கட்ட ஊக்கத்தொகை பெற்று வந்த 23 மாணவிகளும், இரண்டாம் கட்ட முதலாம் ஆண்டு படிக்கும் 20 மாணவிகளும் நீண்டகால விடுப்பில் இருந்து வருகின்றனர். எனவே மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகுந்த ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவிகளை தொடர்ந்து கல்வி பயில்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

விடுபடாமல்

நடப்பு கல்வியாண்டில், இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கும் இணையதள முகப்பில் புதியதாக 3 விதமான வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்லூரியில் உள்ள ஒருங்கிணைப்பாளர்களுக்கு புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட வழிமுறைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. எனவே இத்திட்டத்தின்கீழ் தகுதியான மாணவிகள் யாரும் விடுபடாமல் இத்திட்டத்தை சிறப்பான முறையில் அலுவலர்கள் செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், மாவட்ட சமூகநல அலுவலர் ராஜம்மாள், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜேஸ்வரன் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com