கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., குறித்த புகாரை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார் கலெக்டர்

த.வெ.க. எம்.எல்.ஏ. மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன.
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., குறித்த புகாரை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார் கலெக்டர்
Published on: 

சென்னை,

த.வெ.க. ஆட்சி அமைந்து 6 மாதம் நிறைவடைந்து உள்ளது. சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து அரசை நோக்கி எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், சமீபகாலமாக த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் சர்ச்சையில் சிக்கி வருகிறார்கள்.

துணை சபாநாயகர் ரவிசங்கர், தன்னிடம் புகார் கொடுக்க வந்தவரை தாக்கியதாக கூறப்படும் விவகாரத்தில் சிக்கியுள்ள நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது புகார் எழுந்து இருக்கிறது.

தற்போது இந்த விஷயம் மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. சர்ச்சையில் சிக்கியுள்ள த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், த.வெ.க. கூட்டணி கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன.

10 நாட்களுக்கு முன்

இந்த சூழலில் இந்த குற்றச்சாட்டை த.வெ.க. எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ், சட்ட அமைச்சர் நிர்மல்குமார் ஆகியோர் மறுத்துள்ளனர். ஆனால், கலெக்டர் இது தொடர்பாக கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக 10 நாட்களுக்கு முன் விழுப்புரம் கலெக்டரும், பத்மஜாவின் கணவருமான ஷேக் அப்துல் ரகுமான், தலைமை செயலர் சாய்குமாரை சந்தித்து புகார் அளித்துள்ளார். இதுகுறித்து தலைமை செயலாளரும் எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறது.

இந்நிலையில் தலைமை செயலாளருக்கு அளித்த புகார் விபரங்களை மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சி துறைக்கு, முறைப்படி கலெக்டர் பத்மஜா அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

X