

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாமில் உள்ள இலங்கை தமிழர்கள் தங்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிக்கக்கோரியும், சொந்த நாட்டுக்கு அனுப்பக்கோரியும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். கடந்த பல நாட்களாக தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டவர்களில் 19 பேர் தூக்கமாத்திரை தின்றும், ஒருவர் தீக்குளித்தும் தற்கொலைக்கு முயன்றனர். திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த இவர்களில் 14 பேர் நேற்று முன்தினம் நள்ளிரவு டிசார்ஜ் செய்யப்பட்டு சிறப்பு முகாமுக்கு திரும்பினார்கள். அத்துடன் காத்திருப்பு போராட்டத்தையும் தொடர்ந்தனர். இதுபற்றி அறிந்த திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் சிறப்பு முகாமுக்கு நேரில் சென்று போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அவர்கள் தங்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிக்கவும், சொந்த நாட்டுக்கு அனுப்பவும் வேண்டுகோள் விடுத்தனர். அத்துடன், சிறப்பு முகாமில் தூய்மைப்பணி மேற்கொள்ளவும் கோரிக்கை விடுத்தனர். உங்கள் வேண்டுகோள் குறித்து அரசுக்கு பரிந்துரை செய்வதாகவும், தூய்மைப்பணியை உடனடியாக மேற்கொள்ள உத்தரவிடுவதாகவும் அவர் கூறினார். இதைத்தொடர்ந்து அவர்கள் தங்கள் அறைகளுக்கு சென்றனர். இந்த பேச்சுவார்த்தையின் போது, திருச்சி மாநகர துணை போலீஸ் கமிஷனர் ஸ்ரீதேவி மற்றும் போலீசார், வருவாய்த்துறையினர் உடன் இருந்தனர்.