

நெல்லை,
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆலகுடியை சேர்ந்தவர் இஸ்ரவேல் (வயது 55). அரசு பஸ் டிரைவர். இவருடைய மகன் கீர்த்தி ஆசீர் (29), பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் தற்காலிக பேராசிரியராக பணிபுரிந்தார்.
கீர்த்தி ஆசீருக்கும், பாளையங்கோட்டையை சேர்ந்த சுகன்யாவுக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது. சுகன்யா, சேரன்மாதேவியில் உள்ள கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
போலீசில் புகார்
இதற்கிடையே சுகன்யா, பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில், தனது கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கீர்த்தி ஆசீருக்கு நிரந்தர பணிக்கான நேர்முக தேர்வு நாளை (திங்கட்கிழமை), அவர் பணிபுரியும் கல்லூரியில் நடைபெறுவதாக இருந்தது. கீர்த்தி ஆசீரை கல்லூரிக்கு வரும்படி நேற்று கல்லூரி நிர்வாகம் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி கீர்த்தி ஆசீர் தன் பெற்றோருடன் கல்லூரிக்கு சென்றார். அப்போது, உங்கள் குடும்ப பிரச்சினையை முடித்து விட்டு வந்தால்தான் நிரந்தர பணி குறித்து பேச முடியும் என்று கல்லூரி நிர்வாகத்தினர் கூறியதாக தெரிகிறது.
விஷம் குடித்தனர்
இதனால் அதிர்ச்சி அடைந்த கீர்த்தி ஆசீர், தன் தாயை பாளையங்கோட்டையில் உள்ள சகோதரி வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு மீண்டும் கல்லூரிக்கு வந்தார். அப்போது கையோடு விஷம் வாங்கி வந்தார்.
பின்னர் கல்லூரி முன்பு கீர்த்தி ஆசீர், தன் தந்தை இஸ்ரவேலுடன் சேர்ந்து விஷம் குடித்தார். சிறிது நேரத்தில் இருவரும் அங்கேயே மயங்கி விழுந்தனர்.
ஆஸ்பத்திரியில் சாவு
உடனே அங்கு இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி கீர்த்தி ஆசீரும், இஸ்ரவேலும் இறந்தனர். இச்சம்பவம் பாளையங்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து கல்லூரி பேராசிரியர் ஒருவர் கூறுகையில், கீர்த்தி ஆசீர் தன் தந்தையுடன் தற்கொலை செய்து கொண்டது அவருடைய தனிப்பட்ட குடும்ப பிரச்சினை. பணி நிரந்தரத்துக்கும், அவர்களின் தற்கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்றார்.