மாணவி அளித்த பாலியல் தொல்லை புகாரில் நந்தனம் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் கைது

மாணவி அளித்த பாலியல் தொந்தரவு புகாரில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் கைது செய்யப்பட்டார்.
மாணவி அளித்த பாலியல் தொல்லை புகாரில் நந்தனம் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் கைது
Published on

உடற்கல்வியியல் கல்லூரி

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் உடற்கல்வியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் விடுதியில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த கல்லூரியின் முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் (வயது 50) மீது 23 வயது மாணவி ஒருவர் சைதாப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த டிசம்பர் மாதம் பாலியல் புகார் அளித்தார். அதில் அவர், கல்லூரியின் முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் 'வாட்ஸ்-அப்' வாயிலாகவும், செல்போன் குறுந்தகவல் மூலமாகவும் ஆபாச தகவல்களை அனுப்பி பாலியல்ரீதியாக தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார் என்று பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்தார்.

இந்த புகார் மனுவின் பேரில் ஜார்ஜ் ஆபிரகாம் மீது சைதாப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜார்ஜ் ஆபிரகாம் முன்ஜாமீன் பெற்றார். இந்த நிலையில் ஜார்ஜ் ஆபிரகாம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உடற்கல்வியியல் பயிற்சி மாணவ-மாணவிகள் கடந்த மாதம் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் குதித்தனர்.

விசாரணை கமிட்டி

அதைத்தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் சார்பில் 8 பேர் அடங்கிய விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி விசாரணையின்போது, இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 17 வயது மாணவி ஒருவர், தான் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது தனது அழகை வர்ணித்து பாலியல்ரீதியாக ஜார்ஜ் ஆபிரகாம் அத்துமீற முயன்றார் என்று பரபரப்பு புகாரை அளித்தார்.

அதையடுத்து அந்த கமிட்டியின் பரிந்துரையின் பேரில் அந்த மாணவி சைதாப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ஜார்ஜ் ஆபிரகாம் மீது அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

'போக்சோ' சட்டத்தில் கைது

இந்த நிலையில் நந்தனம் உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள குடியிருப்பில் தங்கியிருந்த அவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் ஜார்ஜ் ஆபிரகாம் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com