

உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே கார் விபத்தில் கல்லூரி முதல்வர் பலியானார். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.
ஈரோடு ராயல் கார்டன் பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 49). இவர் குமாரபாளையத்தில் உள்ள ஒரு பிசியோதெரபி கல்லூரியில் இயன்முறை மருத்துவப்பிரிவின் முதல்வராக பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி கிருஸ்டினா (48). இவர் பவானி அந்தியூர் அரசு மருத்துவமனையில் பிசியோதெரபி மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகன் அஸ்வின் (18).
இந்நிலையில் அஸ்வினை, சென்னையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்ப்பதற்காக அய்யப்பன், கிருஸ்டினா மற்றும் அஸ்வின் ஆகியோர் தங்களது காரில் சென்னைக்கு சென்றுவிட்டு, பின்னர் மீண்டும் சொந்த ஊர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
காரை அய்யப்பன் ஓட்டினார். நேற்று மாலை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவே இருந்த தடுப்புக்கட்டையில் மோதியது.
மோதிய வேகத்தில் சாலையின் மறுமார்க்கத்தில் திருச்சி- சென்னை செல்லும் சாலையில் பாய்ந்த கார், அவ்வழியாக சென்னை நோக்கி சென்ற தனியார் ஆம்னி பஸ்சின் பக்கவாட்டில் உரசியதோடு, அதன் பின்னால் உளுந்தூர்பேட்டையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற ஒரு காரின் மீதும் நேருக்கு நேர் மோதியது. இதில் உளுந்தூர்பேட்டையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் அய்யப்பன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அஸ்வின், கிருஸ்டினா மற்றும் பள்ளத்தில் கவிழ்ந்த காரில் பயணித்த உளுந்தூர்பேட்டை சக்தி நகரை சேர்ந்த மோகனவேல் (50), அவரது மனைவி அன்பரசி (48), மகன் சதீஷ் (23) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்தில் படுகாயமடைந்த அஸ்வின் உள்பட 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.