

சோமரசம்பேட்டை:
நகை பறிப்பு
ராம்ஜிநகர் அருகே உள்ள கள்ளிக்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் நந்தினி(வயது 30). இவர் பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று வேலை முடிந்து சத்திரம் பஸ் நிலையம் சென்று விட்டு, வீட்டிற்கு பஸ்சில் திரும்பி வந்தார்.
கள்ளிக்குடி பஸ் நிறுத்தத்தில் இறங்கி வீட்டிற்கு அவர் நடந்து சென்றபோது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள், நந்தினி கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து ராம்ஜிநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டாக்கத்தியுடன் நின்ற 4 பேர் கைது
*மதுரை மாவட்டம், சூரைபட்டிபுதூரை சேர்ந்த சத்தியமூர்த்தி(27) துவரங்குறிச்சி அருகே கஞ்சா விற்றபோது, போலீசார் கைது செய்தனர். எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் கஞ்சா விற்றதாக ராம்ஜிநகரை சேர்ந்த ஆறுமுகத்தை(42) போலீசார் கைது செய்தனர்.
*சோமரசம்பேட்டை அருகே உள்ள எட்டரை கிராமத்தில் சிவன் கோவில் அருகே பயங்கர ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபட்டதாக, 4 பேரை சோமரசம்பேட்டை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் எட்டரை மேலத்தெருவை சேர்ந்த கோகுல்(28), அவரது நண்பர் தெற்கு தெருவை சேர்ந்த அருண்பாண்டியன் என்ற குண்டு ராஜா(33) ஆகியோர் பட்டாக்கத்தியுடன் வந்ததும், அதேபோல் எட்டரை கடைவீதி மெயின் ரோடு பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன்(28), இவரது தம்பி தமிழரசன்(24) ஆகியோர் பட்டாக்கத்தியுடன் மோதிக் கொள்வதாக இருந்தபோது அவர்களை போலீசார் பிடித்ததும் தெரியவந்தது. 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
*சமயபுரத்தில் தங்கும் விடுதிகளில் விபசாரத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 19 பேரை சமயபுரம் போலீசார் கைது செய்தனர். அவர்களை திருச்சி ஜெ.எம். எண் 2 கோர்ட்டில் ஆஜர்படுத்தி, 11 ஆண்களை திருச்சி மத்திய சிறையிலும், 8 பெண்களை திருச்சியில் உள்ள காப்பகத்திலும் அடைத்தனர்.
குண்டர் சட்டம் பாய்ந்தது
*ஸ்ரீரங்கம், ஆர்.எஸ்.ரோடு பகுதியை சேர்ந்த படையப்பா என்ற ரெங்கராஜை(43) கொலை முயற்சி வழக்கில் போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவிட்டார்.
*திருச்சி கே.கே.நகர் அய்யப்பன் நகரை சேர்ந்த புகழேந்தியின்(54) வீட்டுக்குள் புகுந்து செல்போன், பணத்தை திருட முயன்ற எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த சுப்பிரமணியை(40) போலீசார் கைது செய்தனர்.
பெயிண்டரிடம் பணம் பறிப்பு
*திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் பணம் வைத்து சூதாடியதாக வரகனேரியை சேர்ந்த விசுவாசம்(46), கருப்பையா(39), பாலகிருஷ்ணன்(41), லோகநாதன்(37) ஆகியோரை கண்டோன்மெண்ட் போலீசார் கைது செய்தனர். இதேபோல் கே.கே.நகர் பகுதியில் 2 பேரும், தில்லைநகர் பகுதியில் 3 பேரும் பணம் வைத்து சூதாடியதாக கைது செய்யப்பட்டனர்.
*திருச்சி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நீண்ட நாட்களாக கேட்பாரின்றி நின்ற 6 இருசக்கர வாகனங்களை அரசு ஆஸ்பத்திரி போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
*திருச்சி பாலக்கரை காஜாபேட்டை பகுதியை சேர்ந்த பெயிண்டரான கார்த்திக்கிடம்(27) கத்தி முனையில் ரூ.1,200-ஐ பறித்துச்சென்ற ரவுடிகளான சந்துரு(29), மதன்ராஜ் (32) மற்றும் அசோக் (23) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காரில் வந்து பணம் பறித்தவர் கைது
*புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பகுதியை சேர்ந்த வெங்காய வியாபாரியான ராஜா (வயது 39), திருச்சி பழைய பால்பண்ணை அருகே நடந்து சென்றார். அப்போது காரில் வந்த ஒருவர், ராஜாவை மறித்து அரிவாளை காட்டி மிரட்டி ரூ.2 ஆயிரத்தை பறித்து சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் காந்திமார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பகுதியை சேர்ந்த பிரவீன் என்ற அருண்பாலை(37) கைது செய்தனர்.