கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட தொழிலாளி கொலை: கல்லூரி மாணவர் கைது

ஆழ்வார்திருநகரி பஜாரில் நின்று கொண்டிருந்த வாலிபரிடம், பொதுமக்கள் முன்னிலையில் கொடுத்த பணத்தை தொழிலாளி ஒருவர் திரும்ப கேட்டதால் அவர்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி அழகுமுத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த இசக்கிமுத்து (வயது 42), தொழிலாளி. இவருக்கு நம்பிலா என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். இவரது சொந்த ஊர் நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளம் ஆகும். கடந்த 2 ஆண்டுகளாக இசக்கிமுத்து ஆழ்வார்திருநகரியில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்த பகுதியில் அவர் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் முத்து(21) அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டார். இதில் இசக்கிமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஆழ்வார்திருநகரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த முத்துவை நேற்று பிடித்தனர். அவர் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.
அவர் போலீசாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், "இசக்கிமுத்துவிடம் ஒரு அவசர உதவிக்காக ரூ.10 ஆயிரம் வாங்கி இருந்தேன். அதை அவர் திரும்ப கேட்டுவந்தார். அவரிடம் வாங்கிய பணத்தை நான் தராமல் இருந்தேன். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆழ்வார்திருநகரி பஜார் பகுதியில் நின்று கொண்டிருந்த என்னிடம் பொதுமக்கள் முன்னிலையில் கொடுத்த பணத்தை மீண்டும் அவர் திரும்ப கேட்டார்.
இதில் எங்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து நான் சென்று விட்டேன். இதனால் அவர் மீது ஆத்திரத்தில் இருந்து வந்தேன். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற நான் அவரை சரமாரியாக வெட்டி கொைல செய்து விட்டு தப்பி ஓடிவிட்டேன். போலீசார் என்னை பிடித்து விட்டனர்" என்று தெரிவித்துள்ளார்.






