தாலி கட்டிய வீடியோவை வெளியிடுவதாக மிரட்டிய காதலன்: கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி

கல்லூரி மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கரூர்,

கரூர் மாவட்டத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், புகழூர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் (25 வயது) என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அந்த பெண் பாலமுருகனிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.

இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் 22-ந்தேதி பாலமுருகன் கோவை தனியார் கல்லூரி விடுதியில் தங்கி உள்ள இளம்பெண்ணிடம் செல்போனில் பேசியுள்ளார். அப்போது நீ என்னை வந்து சந்திக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் கோவையில் இருந்து கரூர் மாவட்டத்துக்கு வந்து பாலமுருகனை சந்தித்து பேசியுள்ளார். பின்னர் அவரை கோவைக்கு பேருந்தில் அனுப்பி வைப்பதாக கூறி பேருந்து நிலையத்துக்கு பைக்கில் பாலமுருகன் அழைத்து சென்றுள்ளார். சிறிது தூரம் சென்றவுடன் பாலமுருகன் பைக்கை சாலையோரம் நிறுத்தினார். பின்னர் தனது பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த தாலி கயிற்றை எடுத்து மாணவியின் கழுத்தில் வலுக்கட்டாயமாக கட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவி அங்கிருந்து பேருந்து மூலம் கோவைக்கு சென்றுவிட்டார். இதற்கிடையே கல்லூரி விடுமுறை விடப்பட்டதால் அந்த இளம்பெண் தனது வீட்டிற்கு வந்துள்ளார். இதனை அறிந்த பாலமுருகன் கடந்த 8-ந்தேதி இரவு அந்த இளம்பெண்ணின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும், தன்னுடன் வராவிட்டால் உனக்கு தாலி கட்டிய வீடியோவை எல்லோருக்கும் அனுப்பி விடுவேன். மேலும், உன்னையும், உனது குடும்பத்தினரையும் வீட்டில் வைத்து எரித்து கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் விரக்தி அடைந்த மாணவி எலி பேஸ்டை (விஷம்) தின்று தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம் பெண்ணுக்கு கட்டாய தாலி கட்டி, அவருக்கும், அவரது குடும்பத்துக்கும் கொலை மிரட்டல் விடுத்த பாலமுருகனை கைது செய்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com