கல்லூரி மாணவியை நிர்வாண வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டல்: 2 பேர் கைது

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி கல்லூரி மாணவியை நிர்வாண வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கோவை,

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்

சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியைச் சேர்ந்த மாணவி, கோவை கோவில்பாளையம் பகுதியில் தங்கி தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். அவருக்கு மேச்சேரி பகுதியைச் சேர்ந்த அருண் என்ற அருணாச்சலம் (20 வயது) என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

மாணவியிடம் நெருக்கமாக பழகிய அருண், மாணவி கேட்டுக் கொண்டதன்பேரில் அவரது நகையை வாங்கி ரூ.60 ஆயிரத்திற்கு அடகு வைத்துள்ளார். ஆனால் அதில் ரூ.30 ஆயிரம் மட்டுமே மாணவியிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. மீதித் தொகை குறித்து கேட்டபோது, தனது பைக் தவணைக்காக நிதி நிறுவனம் எடுத்துக் கொண்டதாக அருண் தெரிவித்துள்ளார். மேலும் சந்தேகம் இருந்தால் நிதி நிறுவன மேலாளரிடம் கேட்டுக்கொள் என்று கூறி தனது நண்பர் சந்தோஷ் (20 வயது) என்பவருடைய எண்ணையும் மாணவியிடம் கொடுத்துள்ளார்.

பணம் கேட்டு மிரட்டல்

அதன்பிறகு அவர்கள் இருவரும் அந்த கல்லூரி மாணவியிடம் பேசி பழகி வந்தனர். அவர்களின் காதல்மொழியில் அந்த மாணவி ஈர்க்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர்கள் இருவரும் அந்த மாணவியிடம் வாட்ஸ்-அப் வீடியோ காலில் அடிக்கடி பேசி வந்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரும் மாணவியிடம் நிர்வாணமாக வீடியோ காலில் பேசுமாறு கூறியதாக தெரிகிறது.

அதன்படி பேசிய மாணவியின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோவை அவர்கள் இருவரும் ரகசியமாக பதிவு செய்தனர். அதன்பிறகு நிர்வாண வீடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, மாணவியிடம் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.

2 வாலிபர் கைது

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதை அறிந்த அவரது தோழி விசாரித்தபோது சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. தொடர்ந்து கோவில்பாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மாணவியை நிர்வாண வீடியோ மூலம் மிரட்டி பணம் பறிக்க முயன்றது உறுதியானது. இதையடுத்து அருணாச்சலம் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com