காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு... கல்லூரி மாணவி, காதலன் அடுத்தடுத்து தற்கொலை

இருவரின் காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரியவரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே நாகுடியை அடுத்த புறங்காடு கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பிரகாஷ் (வயது 17). இவர் தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். நெமெலிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல் மகள் அபிநயா (17). இவர் புதுக்கோட்டையில் உள்ள அரசு கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இவர்கள் 2 பேரும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை திருவப்பாடி அருகே உள்ள அத்தாணி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்றாக படித்து வந்தனர். அப்போது அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. இவர்களது காதல் விவகாரம் பெற்றோர்களுக்கு தெரியவரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் கல்லூரியில் சேர்ந்த பிறகும் அவர்களது காதல் தொடர்ந்தது. இதனை அபிநயாவின் பெற்றோர் மீண்டும் கண்டித்தனர். இதனால் மனமுடைந்த அபிநயா கடந்த 28-ந் தேதி வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்துள்ளார். வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு அறந்தாங்கியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அபிநயா சிகிச்சை பலனின்றி அன்று இரவே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையறிந்த பிரகாஷ் மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். இந்நிலையில் பிரகாஷ் வீட்டில் இருந்த உத்திரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






