

சென்னை,
சென்னை மாதவரம் பகுதியில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவர் பலியானார்.
சென்னையை அடுத்த மணலி பெரியதோப்பு சீனிவாச பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ராஜி மகன் ஜனா (வயது 20). இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று காலை கல்லூரியில் தேர்வு எழுதுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மாதவரம் மஞ்சம்பாக்கம் சந்திப்பு அருகே சென்றபோது, அதே திசையில் வந்த டிப்பர் லாரி அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த ஜனா மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. லாரி சக்கரத்தில் சிக்கிய ஜனா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய டிப்பர் லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.