கோவில்பட்டியில் பைக் விபத்தில் கல்லூரி மாணவர் பலி

தூத்துக்குடி மாவட்டம் சவலாபேரியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர், மதுரை- நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக பைக் நிலைதடுமாறி சாலையோர தடுப்புச் சுவரில் மோதியது.
கோவில்பட்டியில் பைக் விபத்தில் கல்லூரி மாணவர் பலி
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் சவலாபேரியை சேர்ந்த தில்லைசரவணன் (வயது 20), கோவில்பட்டி என்.ஜி.ஓ. காலனியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து, சில்லாங்குளத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயின்று வந்தார். நேற்று முன்தினம் தனது கல்லூரி சான்றிதழ்களை வாங்குவதற்காக உறவினரின் பைக்கில் கல்லூரிக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் பெத்தேல் ஆலயம் அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக பைக் நிலைதடுமாறி சாலையோர தடுப்புச் சுவரில் மோதியது. மேலும், கட்டுப்பாட்டை இழந்த பைக், எதிரே அபினேஷ் என்பவர் ஓட்டி வந்த மற்றொரு பைக் மீதும் பலமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த தில்லைசரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு பைக்கில் வந்த அபினேஷ் மற்றும் கிருஷ்ணன் ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார், காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தில்லைசரவணனின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com