

விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கிளியனூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி, திண்டிவனம் பகுதியில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த செவிலியரான அருந்ததியும் நெருங்கிய தோழிகள். இருவரும் அனந்தமங்கலம் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு ஒன்றாக சென்று வருவது வழக்கம். அப்போது ஒரு நாள் கோவிலுக்கு செல்லும்போது இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான பிரபல யூடியூபரான ஆதி (23 வயது), என்பவரை சந்தித்தனர். தொடர்ந்து கல்லூரி மாணவிக்கும், ஆதிக்கும் நட்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கல்லூரி மாணவி, ஆதியை காதலிப்பதாக கூறியுள்ளார்.
உடனே ஆதி தனக்கு ஒரு காதலி இருப்பதாகவும், தன்னுடைய நண்பரான சென்னை கல்லூரியில் படித்து வரும் சந்துரு என்பவரை அறிமுகம் செய்து வைத்து அவரை காதலிக்கும்படி கூறியுள்ளார். சந்துருவுக்கும், கல்லூரி மாணவிக்கும் நாளடைவில் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்துள்ளனர். திண்டிவனம் பகுதியில் 4 பேரும் ஒன்றாக சுற்றி வந்துள்ளனர். கல்லூரி மாணவியும், சந்துருவும் அங்குள்ள காட்டுப்பகுதியில் தனியாக அடிக்கடி சந்தித்து நெருக்கமாக இருந்து வந்துள்ளனர். சந்துருவுடன் தான் நெருக்கமாக இருந்தது பற்றி கல்லூரி மாணவி, தனது தோழி அருந்ததியிடம் கூறியுள்ளார்.
இதை பயன்படுத்திக்கொண்ட அருந்ததி, நீயும் சந்துருவும் தனிமையில் இருந்ததை ஆதியும், சந்துருவும் படம்பிடித்து வைத்துள்ளனர். விரைவில் அதை இன்டர்நெட்டில் வெளியிடப் போவதாக கூறுகின்றனர். எனவே அவர்களுக்கு பணத்தை கொடுத்து சரி செய்து விடலாம் என்று கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவி, வீட்டில் இருந்த ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்தை தோழி அருந்ததியிடம் கொடுத்து, நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியே வராமல் பார்த்துக் கொள்ளும்படி அழுது புலம்பி உள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் பணம் காணாமல் போனது குறித்து மாணவியிடம் பெற்றோர் விசாரித்துள்ளனர். ஆனால், அவர் உண்மையை சொல்லாமல் அதிகப்படியான தூக்க மாத்திரையை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து கிளியனூர் போலீசார் முதலில் விசாரணை நடத்தினர். பின்னர் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜாதா மாணவி பாதிக்கப்பட்டதை புகாராக பெற்று விசாரணை மேற்கொண்டார்.
அதைத்தொடர்ந்து கல்லூரி மாணவியிடம் மோசடியில் ஈடுபட்ட அவரது தோழி அருந்ததி, காதலன் சந்துரு, யூடியூபர் ஆதி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் மூவரும் நேற்று வானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சந்துரு, ஆதி இருவரும் திண்டிவனம் சிறையிலும், அருந்ததி விழுப்புரம் மகளிர் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.