

தூத்துக்குடி,
ஸ்ரீ வைகுண்டம் அருகே முன்பகை காரணமாக ஏற்பட்ட தகராறில் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் பகுதியில் உள்ள ஆழ்வார்கற்குளத்தில் வீட்டின் முன்பு கழிவு நீர் ஓடுவது தொடர்பாக மாரியப்பன் குடும்பத்தினருக்கும், சுந்தர்ராஜன் குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது பகையாக மாறியது. இந்த நிலையில் நேற்று அப்பகுதியில் நடைபெற்ற திருவிழாவிற்கு ஊர்மக்கள் ஒன்றிணைந்து சென்று வீடு திரும்பினர். பின்னர், மாரியப்பன் குடும்பத்தினருக்கும் சுந்தர்ராஜன் குடும்பத்தினருக்கும் இடையே முன்பகை காரணமாக மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இரு தரப்பினரும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில், மாரியப்பனின் மகன் இசக்கிராஜா (வயது 20) என்ற கல்லூரி மாணவர் மீது வெட்டு விழுந்தது. பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர், இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த இசக்கிராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகார்களின் அடிப்படையில், மாரியப்பன் தரப்பை சேர்ந்த 4 பேர் மீதும், எதிர்தரப்பை சேர்ந்த சுந்தர்ராஜன் உள்ளிட்ட 10 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.