

கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டத்தில் காதலன் இறந்த சோகத்தில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே உள்ள இடைத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் அமிர்தா கிருஷ்ணன் (17 வயது). இவர் தக்கலை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார். தனது வீட்டிலேயே பள்ளி மாணவ-மாணவிகளுக்கு டியூசன் எடுத்து வந்தார்.
அமிர்தா கிருஷ்ணனும் கேரள மாநிலம் மணக்காடு பகுதியை சேர்ந்த அர்ஜூன் என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 5 நாட்களுக்கு முன்பு அர்ஜூன் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காதலன் தற்கொலை செய்த தகவலையறிந்த அமிர்தா கிருஷ்ணன் மனமுடைந்த நிலையில் சோகத்துடன் காணப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று மதியம் வீட்டின் படுக்கை அறையில் அமிர்தா கிருஷ்ணன் தூக்கில் தொங்கினார். மாலையில் டியூசனுக்கு வந்த மாணவர்கள் அமிர்தா கிருஷ்ணன் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியில் அலறினர். மாணவ-மாணவிகளின் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த அமிர்தா கிருஷ்ணனின் பெற்றோர் அங்கு ஓடி வந்தனர். அப்போது மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு கதறி அழுதனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.