உடல் எடையை குறைக்க யூடியூப் பார்த்து நாட்டு மருந்து சாப்பிட்ட கல்லூரி மாணவி - அடுத்த நடந்த விபரீதம்


உடல் எடையை குறைக்க யூடியூப் பார்த்து நாட்டு மருந்து சாப்பிட்ட கல்லூரி மாணவி - அடுத்த நடந்த விபரீதம்
x

மதுரையில் கல்லூரி மாணவி ஒருவர் உடல் எடையை குறைக்க யூடியூப் பார்த்து நாட்டு மருந்து சாப்பிட்டுள்ளார்.

மதுரை

மதுரை செல்லூர் மீனாம்பாள்புரத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் கலையரசி (19 வயது). இவர், மதுரையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், கலையரசி உடல் எடையை குறைப்பது தொடர்பாக யூடியூப்பில் சில வீடியோக்கள் பார்த்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து, கீழமாசி வீதியில் உள்ள நாட்டு மருந்துகள் விற்கும் கடை ஒன்றுக்கு சென்று, யூடியூப்பில் பார்த்த குறிப்புகளை வைத்து சில மருந்து பொருட்களை வாங்கி உள்ளார்.

பின்னர் வீட்டுக்கு சென்று அந்த மருந்தை சாப்பிட்டு உள்ளார். சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பெற்றோர் உடனடியாக கலையரசியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் இரவில் மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே கலையரசி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அவரது தந்தை வேல்முருகன் அளித்த புகாரின்பேரில், செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, “யூடியூப்பில் வீடியோக்களை பார்த்து இதுபோன்று மருந்துகளை எடுத்துக்கொள்ளும் பழக்கம் அதிகரித்து வருகிறது. மருத்துவர் பரிந்துரை இல்லாமல் எந்த மருந்தை உட்கொண்டாலும் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. மாணவி கலையரசி எந்த மாதிரியான நாட்டு மருந்தை உட்கொண்டார் என்பது பற்றிய தகவலை சேகரித்து வருகிறோம். சம்பந்தப்பட்ட நாட்டு மருந்து கடையிலும் விசாரணை நடத்த உள்ளோம். முறையான விசாரணையின்றி, நாட்டு மருந்து பொருட்களை கொடுக்கக்கூடாது என கடைக்காரர்களிடம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது” என்றனர்.

1 More update

Next Story