கல்லூரி மாணவரின் கைகள் வெட்டப்பட்ட சம்பவம்: சாதி வெறிச் செயலுக்கு முத்தரசன் கண்டனம்


கல்லூரி மாணவரின் கைகள் வெட்டப்பட்ட சம்பவம்: சாதி வெறிச் செயலுக்கு முத்தரசன் கண்டனம்
x

குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டுமென முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;

"சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகில் உள்ள மேலபிடவூரை சேர்ந்தவர் ஆர்.அய்யாசாமி (19), இவர் பட்டியலின சமூகப் பிரிவைச் சேர்ந்தவர். அரசுக் கல்லூரியில் மூன்றாமாண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவர் புல்லட் ஓட்டியதால் கைகள் வெட்டப்பட்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

பட்டியலின சமூகத்தில் இப்படி ஒரு வாழ்க்கை வாழ்வதைக் கூட, சகித்துக் கொ ள்ள முடியாத சாதி வெறி ஆதிக்கம் இந்த மேலப்பிடவூர் கிராமத்தில் காட்டாட்சி நடத்தி வருவதை அரசு இனியும் அனுமதிக்கக் கூடாது. வழக்கம் போல, நேற்று 12.02.2025 கல்லூரிக்கு சென்ற அய்யாச்சாமி திருப்பி வந்த போது, வீட்டின் அருகே மறைந்திருந்த சாதி வெறியர்கள் அய்யாச்சாமியின் இரண்டு கைகளையும் வெட்டியுள்ளனர். "இந்த சாதியில இருந்திட்டு, எங்க முன்னாடியே எப்படிடா புல்லட் ஓட்டலாம்" என்று கேட்டு கொக்கரித்தபடி, கைகளை வெட்டியுள்ளனர். சாதி வெறியர்களின் கொடுஞ்செயலை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக் குழு வன்மையாக கண்டிக்கிறது.

வெட்டுப்பட்ட அய்யாச்சாமி உடனடியாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகளில் இருவர் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குக்களில் தேடப்படுபவர்கள் எனக் கூறப்படுகிறது.

இந்த மேலப்பிடவூரில் சாதி வெறித் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு, பூமிநாதன் என்பவர் புல்லட் வாங்கியதை பொறுத்துக் கொள்ளாத சாதிவெறியர்கள் அவரது வீட்டை தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். அப்போது கொடுக்கப்பட்ட புகார் மீது காவல்துறை தக்க நடவடிக்கை எடுத்திருந்தால், சாதிவெறி சக்திகள் அடங்கியிருக்கும் என தெரியவருகிறது.

இப்போது நடந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர் அய்யாச்சாமிக்கு தேவையான உயர் சிகிச்சை அனைத்தும் கிடைப்பதற்கு அரசு உறுதி செய்ய வேண்டும். அவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். வழக்கை பொருத்தமான சட்டப்பிரிவுகளிலும், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளிலும் பதிவு செய்து, குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடாமல் கடுமையாக தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறது."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story