

சென்னை,
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னையில், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 8 கல்லூரிகளின் மாணவர்கள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு நடைபயணம் (Walkathon) இன்று நடைபெற்றது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
சென்னை மாவட்டத்தில் சட்டமன்றப் பொதுத் தேர்தல் - 2026 மற்றும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் தொடர்பாக, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் சிறப்பு முகாம்களும் பெருநகர சென்னை மாநகராட்சி மூலமாக நடத்தப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக சட்டமன்றப் பொதுத் தேர்தல் - 2026-ஐ முன்னிட்டு, அண்ணாநகரில் உள்ள கந்தசாமி நாயுடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வள்ளியம்மை கல்லூரி, டி.ஜி. வைஷ்ணவா கல்லூரி, திருத்தங்கல் நாடார் கல்லூரி, சென்ட் ஆண்ட்ரியஸ் கல்லூரி, சிந்தி கல்லூரி உள்ளிட்ட 8 கல்லூரிகளைச் சார்ந்த தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என 1,000 பேர் பங்கேற்று தேர்தல் விழிப்புணர்வு நடைபயணம் (Walkathon) மேற்கொண்டனர்.
வாக்காளர் விழிப்புணர்வு நடைபயணத்தில், “வாக்களித்தல் நமது கடமை” என்ற விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி, ஜனநாயகத்தில் வாக்களிப்பதின் அவசியம் மற்றும் வாக்குரிமையின் முக்கியத்துவம் குறித்து பதாகை ஏந்தியவாறு பொதுமக்களுக்கு கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், கல்வி அலுவலர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.