

சென்னை,
கொரோனா தொற்று காலத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டன. அதே போல் செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டன.
அதன்பின்னர், நோய் பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அதேபோல், செமஸ்டர் தேர்வுகளும் நேரடி முறையில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தடையை மீறி போராட்டம் நடத்தும் மாணவர்களை போலீசார் எச்சரித்து அனுப்புகின்றனர்.
இந்தநிலையில் சென்னையில் நேற்று கல்லூரி மாணவர்கள் சிலர் வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் ஒருங்கிணைத்து, வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மாணவர்கள் ஆன்லைன் மூலம் தான் தேர்வு நடத்த வேண்டும், நேரடி ஆப்லைன் தேர்வு வேண்டாம் என்றும், பாடம் நடத்துவதற்கு சோர்வா? அதை ஈடுகட்ட இந்த நேரடி தேர்வா? என்றும் பதாகைகளை கையில் வைத்து கோஷங்கள் எழுப்பியபடி இருந்தனர்.
அதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது 2 நாட்கள் பொறுத்து இருங்கள் என்று போலீஸ் அதிகாரிகள் கூறியதற்கு, தேர்வு நடப்பதற்கு குறுகிய காலம் தான் இருக்கிறது. எனவே உடனடியாக ஆப்லைன் தேர்வு அறிவிப்பை திரும்ப பெற்று, ஆன்லைன் தேர்வை நடத்த வேண்டும் என்று கூறி கலைந்து போக மறுத்துவிட்டனர்.
எனினும் பிற்பகலில் திடீர் மழை பெய்ததால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சிலர் கலைந்து சென்றனர். அதன் பின்னர், சில மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடந்த பகுதிகளில் இருந்து சாலையை நோக்கி வர முயற்சித்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை எச்சரித்து அனுப்பினர்.