பொன்னேரி ரெயில் நிலையத்தில் ரகளை; கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது

பொன்னேரி ரெயில் நிலையத்தில் பேண்டு வாத்தியங்களுடன் பட்டாசு வெடித்து அட்டகாசம் செய்ததை தட்டி கேட்ட ரெயில்வே போலீசாரை தாக்கிய அரசு கல்லூரி மாணவர்கள்7 பேரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.
பொன்னேரி ரெயில் நிலையத்தில் ரகளை; கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது
Published on

மாணவர்கள் ரகளை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உலக நாதன் நாராயணசாமி கலைக்கல்லூரி உள்ளது. இதன் ஆண்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பங்கேற்க கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த மேற்கண்ட கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் புறநகர் ரெயிலில் பொன்னேரி நோக்கி சென்றனர். அவ்வாறு செல்லும் போது புறநகர் ரெயிலில் 'கும்மிடிப்பூண்டி ரூட், அடக்கி ஆண்ட கூட்டம், அடங்கி போக மாட்டோம்' எனவும் பல்வேறு பேனர்களை அவர்கள் வைத்து கொண்டு ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனைக்கண்ட கும்மிடிப்பூண்டி ரெயில்வே போலீசார், இது போல பயணிகளுக்கு இடையூறு செய்ய கூடாது என கல்லூரி மாணவர்களை எச்சரித்து ரெயிலில் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், பொன்னேரி ரெயில் நிலையத்திற்கு வந்து இறங்கிய மேற்கண்ட மாணவர்கள், அங்கு பட்டாசு வெடித்தும், பேண்டு வாத்தியங்களுடன் அடித்து நடனமாடியும், ரெயில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் அநாகரிகமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

7 பேர் கைது

இதனை தட்டி கேட்ட பொன்னேரி ரெயில்வே போலீசார் ஒருவரை கல்லூரி மாணவர்கள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இதனால் ஏற்பட்ட பரபரப்பில் இப்பிரச்சினை தொடர்பாக சம்மந்தப்பட்ட மாணவர்கள் மீது விதிமுறைகளை மீறியது, பயணிகளை அச்சுறுத்தி, அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது, ரெயில்வே ஊழியரை தாக்கியது உட்பட 7 பிரிவுகளின் கீழ் கும்மிடிப்பூண்டி ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதனையடுத்து எளாவூரைச்சேர்ந்த ரஞ்சித், பெரியஓபுளாபுரத்தை சேர்ந்த ஜார்ஜ், சஞ்சய், பாத்தபாளையம் கிராமத்தை சேர்ந்த ரஞ்சித், பெத்திக்குப்பத்தை சேர்ந்த அஜீத், மகேஷ், தேவம்பேட்டையை சேர்ந்த சூர்யா ஆகிய 7 கல்லூரி மாணவர்களை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com