ஆண்டுதோறும் ஒரு கிராமத்தை கல்லூரிகள் தத்தெடுக்க வேண்டும்; உயர்கல்வி மாநாட்டில் கவர்னர் வேண்டுகோள்

அனைத்து கிராமங்களும் மேம்பாடு அடைய கல்லூரிகள் ஆண்டொன்றுக்கு ஒரு கிராமத்தை தத்தெடுக்க வேண்டும் என்று உயர்கல்வி மாநாட்டில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசினார்.
ஆண்டுதோறும் ஒரு கிராமத்தை கல்லூரிகள் தத்தெடுக்க வேண்டும்; உயர்கல்வி மாநாட்டில் கவர்னர் வேண்டுகோள்
Published on

ஊட்டி,

சென்னை கிண்டி ராஜ்பவன் மற்றும் திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனம் இணைந்து வேந்தரின் இலக்கு 2030 - தொழில்துறை சகாப்தத்தில்(4.0) புதுமையான கல்விமுறை என்ற தலைப்பில் 2 நாள் உயர்கல்வி மாநாடு ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் நேற்று தொடங்கியது. மாநாட்டை பல்கலைக்கழகங்களின் வேந்தரும், தமிழக கவர்னருமான பன்வாரிலால் புரோகித் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இதில் திருச்சி இந்திய மேலாண்மை நிறுவன இயக்குனர் பீமராய மேத்ரி, காக்னிசண்ட் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவர் ராம்குமார் ராமமூர்த்தி, டெல்லி தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் மேலாண்மை நிறுவன பேராசிரியர் ராமச்சந்திரன், கே.பி.எம்.ஜி. முன்னாள் தலைமை செயல் அதிகாரி ரிச்சர்ட் ரேகி, இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி மன்ற உறுப்பினர் செயலாளர் வி.கே.மல்ஹோத்ரா, கவர்னரின் செயலாளர் ஆனந்த்ராவ், நீலகிரி மாவட்ட கலெக்டர் ஜே.இன்னசென்ட் திவ்யா, போலீஸ் சூப்பிரண்டு வி.சசிமோகன் மற்றும் 20 பல்கலைக்கழகங்களின் வேந்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:-

993 பல்கலைக்கழகங்களையும் 39,931 கல்லூரிகளையும் கொண்டு, இந்தியா உயர்கல்வி நிறுவனங்களின் மிகப்பெரிய வலைப்பின்னல்களில் ஒன்றாக விளங்குகிறது. அதில் தமிழ்நாடு, உயர்கல்வியில் பெருமை கொள்ளத்தக்க நிலையில் உள்ளது.

மாணவர் சேர்க்கை விகிதம், தேசிய சராசரியான 25.8 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, தமிழகத்தில் 48.6 சதவீதம் ஆக இருக்கிறது. தமிழ்நாட்டில் 59 பல்கலைக்கழகங்களில் ஆண்டுக்கு சுமார் 8.64 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று வெளியேறுகின்றனர்.

கற்பித்தல் முறைகளும் கல்வி பாடத்திட்டங்களும் இன்றைய உலகளாவிய சூழலில் மாறிவரும் தேவைத்தரப்பு உருமாற்றங்களை மாணவர்களுக்கு புரிய வைக்கும் வகையில் மறுவடிவமைப்பு செய்யப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள கிராம மக்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பொருட்டு பல்வேறு மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்கள் குறித்து தெரிவிக்கப்பட வேண்டும். இதனை எய்தும் பொருட்டு, பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி மாணவர்கள், அருகிலுள்ள கிராமங்களுக்கு சென்று களப்பணி மேற்கொள்ள ஊக்குவிக்கப்பட்டு, அரசின் திட்டங்கள் தொடர்பானவை குறித்து விளக்கமளிக்கலாம்.

நம் மாநிலத்தில் 12,620 ஊராட்சிகளும், 2,466 கல்லூரிகளும் உள்ளன. ஒவ்வொரு கல்லூரியும் ஆண்டொன்றுக்கு ஒவ்வொரு கிராமத்தை ஆர்வத்துடன் தத்தெடுப்பின், உடனடியாக ஐந்தாண்டுகளுக்குள் நம் மாநிலத்திலுள்ள அனைத்து கிராமங்களும் மேம்பாடு அடையும்.

இது தொடர்பாக, நாம் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியிருப்பதால், கிராமங்களை முன்னெடுத்து சென்று நம் நாட்டினை வழிநடத்துவதற்கு, அனைத்து துணைவேந்தர்களும் அவர்களின் கடுமையான முயற்சிகளை எடுக்க வேண்டும். ஒவ்வொரு கல்லூரியும் ஆண்டொன்றுக்கு குறைந்தது ஒரு கிராமத்தை தத்தெடுக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

காகித கப்புகளை பயன்படுத்தியதால் சர்ச்சை

நீலகிரி மாவட்டத்தில் அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் காகித கப்புகளை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டு அமலில் இருக்கிறது.

இந்த நிலையில் நேற்று ஊட்டி ராஜ்பவனில் நடந்த உயர்கல்வி மாநாட்டில் பத்திரிகையாளர்களுக்கு தேநீர், தண்ணீர் கொடுக்க காகித கப்புகள் பயன்படுத்தப்பட்டன. இதனை சென்னை ராஜ்பவனில் இருந்து கொண்டு வந்ததாக ஊழியர்கள் தெரிவித்தனர். இருந்தாலும் மாவட்ட நிர்வாகம் தடை செய்த காகித கப்புகள் கவர்னர் நிகழ்ச்சியில் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com