நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மரணம்: இன்று மாலை இறுதிச்சடங்கு

உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரோபோ சங்கர் நேற்று இரவு மரணம் அடைந்தார்.
டி.வி.யில் ஒளிபரப்பான நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ரோபோ சங்கர், பின்னாளில் ‘தீபாவளி' திரைப்படத்தின் மூலம் வெள்ளி திரைக்கு வந்தார். ‘மாரி', ‘விஸ்வாசம்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வந்த அவர், பின்னர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கலக்கத் தொடங்கினார்.
‘அம்பி' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்த படம் விரைவில் ரிலீசுக்கு வர காத்திருந்தது. கட்டுமஸ்தான உடல் கொண்ட ரோபோ சங்கர், சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சைகள் மூலம் மீண்டு வந்த அவர் பழையபடி படங்களில் நடிக்க தொடங்கினார். முன்பு போல உடல் நலமும் தேறினார்.
ஓரிரு நாட்களுக்கு முன்பாக சென்னையில் படப்பிடிப்பில் இருந்தபோது ரோபோ சங்கர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். நீர்ச்சத்து குறைபாடு மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக அவர் மயங்கி விழுந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையில் அவரது உடல்நிலை நேற்று மோசம் அடைந்தது. ‘வெண்டிலேட்டர்’ கருவியுடன் டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 46. ரோபோ சங்கரின் மறைவு செய்தியை கேட்டு அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். ரோபோ சங்கரின் மறைவு திரை உலகில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ரோபோ சங்கர் மரணம் நிகழ்ந்தது எப்படி?
ரோபோ சங்கருக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ரோபோ சங்கர், செப். 16ம் தேதி அன்று மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு குடலில் ரத்தப் போக்கு இருந்தது. மேலும் உள் உறுப்புகள் செயலிழந்த நிலையில் வயிற்றுப்பகுதியிலும் மிக தீவிரமான பிரச்னைகள் இருந்தன.
தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு எங்கள் டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்த போதிலும் பலன் அளிக்கவில்லை. செப் 18ம் தேதி அன்று இரவு 9.05 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இறுதிச்சடங்கு
சென்னை, வளசரவாக்கம் பகுதியில் நடிகர் ரோபோ சங்கரின் வீடு உள்ளது. அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காகவும், பிரபலங்களின் அஞ்சலிக்காகவும் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மதியம் 3 மணிக்கு மேல் நடிகர் ரோபோ சங்கரின் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோபோ சங்கருக்கு பிரியங்கா என்ற மனைவியும், இந்திரஜா என்ற மகளும் உள்ளனர். பிரியங்கா டி.வி. தொடர்களில் நடித்துள்ளார். இந்திரஜா விஜய்யுடன் ‘பிகில்' படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இரங்கல்
ரோபோ சங்கரின் மறைவுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
ரோபோ சங்கர் மறைவுக்கு, நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
ரோபோ சங்கர். ரோபோ புனைப்பெயர் தான். என் அகராதியில் நீ மனிதன் ஆதலால் என் தம்பி.
போதலால் மட்டும் எனை விட்டு நீங்கி விடுவாயா நீ? உன் வேலை நீ போனாய். என் வேலை தங்கிவிட்டேன். நாளையை எமக்கென நீ விட்டுச் சென்றதால் நாளை நமதே.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ரோபோ சங்கர் மறைவுக்கு, நடிகர் சிலம்பரசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
நடிகர் ரோபோ சங்கர் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். எப்போதும் சிரிப்பை பரிமாறிய ஒரு மனிதரை இப்படி இழந்துவிடுவது மிகுந்த வேதனை. அவர் மறைவு திரையுலகத்திற்கும், ரசிகர்களின் இதயங்களுக்கும் பெரும் இழப்பு. என்றும் நம்முள் வாழும் அவரின் சிரிப்புகள் நினைவாகவே இருக்கும். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல் அனுதாபங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






