நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மறைவு: மு.வீரபாண்டியன் இரங்கல்

ரோபோ சங்கர் நேற்று இரவு காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம் என தெரிவித்துள்ளார்.
சென்னை,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
பல குரல் கலையில் ஆர்வம் காட்டி, தலைசிறந்த நகைச்சுவை நடிகராக உயர்ந்த ரோபோ சங்கர் (46) நேற்று (18.09.2025) இரவு காலமானார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தோம்.
மதுரை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட ரோபோ சங்கர், கல்லூரிக் கல்வி பெற்ற காலத்தில் பல குரலில் பேசி அசத்தி வந்தவர். இவரது கிராமிய நடனம் பரவலான ரசிகர்களை பெற்றுள்ளது. விஜய் தொலைகாட்சியில் கலக்கப்போவது யாரு? என்ற நிகழ்வின் மூலம் இவரது நகைச்சுவை திறன் வெளிப்பட்டது. தொடர்ந்து 2011 ஆம் ஆண்டில் “ரௌத்திரம்“ திரைப்படம் மூலம் வெள்ளித்திரைக்கு சென்றவர்.
முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவரது கலைப் பணியைப் பாராட்டி தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்துள்ளது. வெண்ணெய் திரளும் போது தாழி உடைந்தது போல், நல்ல நிலைக்கு உயர்ந்து கொண்டிருந்த வேளையில் ரோபோவின் மறைவு பேரிழப்பாகும். அவருக்கு பிரியங்கா என்ற வாழ்விணையரும், இந்திரஜா என்ற மகளும் இருக்கின்றனர்.
ரோபோ சங்கரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், கலையுலக நண்பர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






