

சென்னை,
பாரத், இந்துஸ்தான், இந்தியன் ஆயில் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும், சமையல் கேஸ் சிலிண்டர்களை நாடு முழுவதும் வினியோகம் செய்து வருகின்றன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர்களின் விலைகளை நிர்ணயித்து வருகின்றன. இதில் சமையல் கேஸ் சிலிண்டர்களின் விலைகளை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து வருகிறது.
அந்த வகையில் இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை உயர்ந்துள்ளது. இதன்படி 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை ரூ.50 உயர்ந்து ரூ.1899.50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
14.2 கிலோ எடை கொண்ட வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலையில் மாற்றம் இல்லாமல் ரூ. 868.50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது.
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வருவது வணிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.