

கோவை,
கோவை மாவட்டத்தில் வணிக சிலிண்டர் வினியோகத்தில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் இங்குள்ள ஓட்டல்கள், டீக்கடைகள், உணவு நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு உள் ளன. மேலும் கோவையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிலும் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு பாதிப்பை ஏற்படுத்தி உள் ளது.
கோவை சுந்தராபுரம் சிட்கோ, மலுமிச்சம்பட்டி, கிணத்துக்கடவு மற்றும் பல்வேறு பகுதிகளில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ளன. இவற்றுக்கு வணிக சிலிண்டர் அத்தியாவசியமாக உள்ளது. கியாஸ் தட்டுப்பாடு காரணமாக கிரில் கேட், பேப்ரிகேஷன், பவுண்டரி, வெட்கிரைண்டர், பம்புசெட், அட்டைப்பெட்டி தயாரிப்பு, பொறியியல் உற்பத்தி பொருட்கள் மற்றும் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு பயன்படும் டேங்கர் ஆகியவற்றின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கோவை தொழிற்பேட்டை உற்பத்தியாளர் நலச்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
எங்களின் தொழிலில் வெல்டிங் மற்றும் தளவாட உற்பத்திகளில் கியாஸ் பயன்பாடு முக்கியமானதாக இருந்து வருகிறது. சிறிய தொழிற்சாலை களில் தினமும் சராசரியாக 2 ஆயிரம் கிலோ வரை வணிக கியாஸ் சிலிண்டர் தேவைப்படும். 20 நாட்களுக்கு 44 ஆயிரம் கிலோ வரை கியாஸ் அவசியம்.
கோவை மாவட்டத்தில் தற்போது கியாஸ் சிலிண்டர் விலை உயர தொடங்கி உள்ளது. முன்பு வணிக சிலிண்டர் ஆர்டர் செய்தால் உடனடியாக எங்களுக்கு கிடைத்து விடும். ஆனால் தற்போது சிலிண்டர் தாமதமாக வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் சிறு, குறு தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பாதிக்கப்படும்.
இதனால் உரிய நேரத்தில் உற்பத்தி பொருளை டெலிவரி செய்ய முடியாத நிலை ஏற்படும். இதன் காரண மாக தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழல் உள்ளது. எனவே கியாஸ் தட்டுப்பாடு நிலை சீராகும் வரை மத்திய-மாநில அரசு கள் ஜி.எஸ்.டி. ரிட்டர்ன் செலுத்துவதில் சலுகை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
ரெயில்வே உதிரி பாகங்கள் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சுருளிவேல், மாநில தொழில் மற்றும் வர்த்தகத்துறை இயக்குனருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முழுவதும் வணிக கியாஸ் கிடைக்காததால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. உற்பத்தியை தொடர்ந்து நடத்த முடியாத நிலை உள்ளது. மாற்று எரிசக்தி மற் றும் மாற்று உற்பத்தி முறைகளை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் தொழில்நிறுவனங்கள் உள்ளன. இத்தகைய மாற்றங்களுக்கு அதிக முதலீடும், கூடுதல் செலவும் தேவை.
எனவே அரசு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சூரிய மின்சார பயன்பாட்டிற்கு மின்சார கட்டணங்களில் தற்காலிக விலக்கு அளிக்கப்பட வேண்டும். தற்போது நெட்ஒர்க் கட்டணம், பீக்அவர் சார்ஜ் ஆகியவை வசூலிக்கப்படுகிறது. இதனால் சிறு தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் செலவாகிறது.
எனவே இந்த நெருக்கடி காலத்தில் தற்காலிகமாக கட்டண விலக்கு அல்லது தளர்வு வழங்க வேண்டும். சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூலம் அதிக வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி, உற்பத்தி ஆகியவை நடக்கிறது. கிளஸ்டர் அபிவிருத்தி திட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும். விரைவில் தேர்தல் நடத்தை முறைகள் அமலுக்கு வர உள்ளன. எனவே அவசர நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக அரசு எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.