வணிக கியாஸ் தட்டுப்பாடு: சென்னை ஓட்டல்களில் உணவு விலை 20 சதவீதம் உயர்வு

அதிக விலை கொடுத்தே சிலிண்டர்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வணிக கியாஸ் தட்டுப்பாடு: சென்னை ஓட்டல்களில் உணவு விலை 20 சதவீதம் உயர்வு
Published on

சென்னை,

மேற்கு ஆசியாவில் நிலவிவரும் போர் பதற்றம் காரணமாக, இந்தியாவுக்கான கச்சா எண்ணெய் மற்றும் கியாஸ் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வணிக கியாஸ் சிலிண்டர்கள் சப்ளை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பெரும்பாலான ஓட்டல்களில் உணவு வகைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளன. விதவிதமான சைடிஸ்கள் இப்போது வழங்கப்படுவது இல்லை. பல ஓட்டல்களில் விறகு மற்றும் மின்சார அடுப்புகள் மூலம் உணவு தயாரிக்கப்பட்டு வருகின்றது.

என்றாலும், கள்ளச்சந்தையில் வணிக பயன்பாடு கியாஸ் சிலிண்டர்கள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. விறகு அடுப்புக்கு வசதியில்லாத பல ஓட்டல்கள் வேறு வழியில்லாமல் அதிக விலை கொடுத்தே வணிக கியாஸ் சிலிண்டர்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னையில் உள்ள ஓட்டல்களில் உணவு வகைகள் விலை 20 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

ராயப்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில், 20 சதவீத விலை உயர்வு குறித்து ரசீதில் தனியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு, சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் இதர பொருட்களின் விலை உயர்வு காரணமாக கூறப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு வருந்துகிறோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு, வணிக கியாஸ் சிலிண்டர் விநியோகம் சீராகும் வரை அமலில் இருக்கும் என்றும் தெரிகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com