பஞ்சமி நிலங்களை கண்டறிய ஆணையம்: மார்க்சிஸ்ட் கம்யூ. வரவேற்பு

பணிகளை நிறைவேற்ற காலவரையறை தீர்மானிக்கப்பட வேண்டுமென்று பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
பெ.சண்முகம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

பஞ்சமி நிலங்களை உடனடியாக பட்டியல் சாதி மக்களுக்கு மறு விநியோகம் செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

பஞ்சமி நிலங்களை கண்டறிய தனியாக ஆணையம் அமைக்கப்படும் என்ற சமூக நீதித்துறை அமைச்சரின் அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. ஏற்கனவே, பல்வேறு காலக்கட்டத்தில் அரசால் ஆணையங்கள், கமிட்டிகள் அமைக்கப்பட்ட பிறகும் பஞ்சமி நில மீட்பில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களில் தற்போது 1.86 லட்சம் ஏக்கர் நிலம் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சமி நிலம் என்று கண்டறியப்பட்ட நிலங்களை உடனடியாக பட்டியல் சாதி மக்களுக்கு மறு விநியோகம் செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

புதிதாக அமைக்கப்பட இருக்கும் ஆணையம், பஞ்சமி நிலங்களை கண்டறிவதுடன், அதை மீட்டு தகுதியான குடும்பங்களுக்கு ஒப்படைக்கச் செய்வது உள்ளிட்ட பணிகளை முழுமையாக செய்வதற்கான அதிகாரம் கொண்டதாக அமைக்கப்பட வேண்டுமென்றும் இப்பணிகளை நிறைவேற்ற காலவரையறை தீர்மானிக்கப்பட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com