சென்னையில் விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க குழு அமைப்பு - மாநகராட்சி ஆணையாளர் சமீரன் தகவல்

மாநகராட்சி ஆலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் கட்டிட வளாகக் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.
சென்னையில் விதிமீறல் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க குழு அமைப்பு - மாநகராட்சி ஆணையாளர் சமீரன் தகவல்
Published on

சென்னை,

சென்னை மாநகராட்சி பகுதிகளில் குடியிருப்பு கட்டடத்திற்கான திட்ட அனுமதி பெற்று கட்டப்பட்ட கட்டிடங்களை வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்துதல் மற்றும் திட்ட அனுமதிக்கு மாறான விதிமீறல் கட்டிடங்கள் ஆகியவற்றின் மீது உடனுக்குடன் தொடர் நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

“பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் சமீரன் தலைமையில், விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் குறித்த சுப்ரீம் கோர்ட்டு வழக்கு சம்பந்தமாக மாநகராட்சி ஆலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் கட்டிட வளாகக் கூட்டரங்கில் இன்று (10.07.2026) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் குடியிருப்பு கட்டிடத்திற்கான திட்ட அனுமதி பெற்று கட்டப்பட்ட கட்டிடங்களை வணிக பயன்பாட்டிற்காக பயன்படுத்துதல் மற்றும் திட்ட அனுமதிக்கு மாறான விதிமீறல் கட்டிடங்கள் ஆகியவற்றின் மீது உடனுக்குடன் தொடர் நடவடிக்கை எடுத்து, அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மேற்படி அமலாக்கப்பணிகளை கண்காணிக்க வட்டார அளவில், வட்டார துணை ஆணையர், கண்காணிப்பு பொறியாளர், முதுநிலை வருவாய் அலுவலர் மற்றும் மண்டல அலுவலர் ஆகியோரை கொண்ட ஒரு குழுவும், மண்டல அளவில் மண்டல அலுவலர், செயற்பொறியாளர், முதுநிலை வருவாய் அலுவலர் மற்றும் உதவி செயற்பொறியாளர் ஆகியோரை கொண்ட மற்றொரு குழுவும் அமைக்கப்பட்டு செயல்படுகிறது என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் காணொலி காட்சியின் வாயிலாக இணை ஆணையர் (பணிகள்) செ.சரவணன், துணை ஆணையர் (வருவாய் (ம) நிதி) சித்ரா விஜயன், வட்டார துணை ஆணையர்கள் எச்.ஆர்.கவுஷிக், இ.ஆ.ப., (மத்தியம்), அதாப் ரசூல், (தெற்கு) மற்றும் முதுநிலை சட்ட அலுவலர் எஸ். ஜேக்கப் ராஜன்பாபு, அலுவலர்கள் கலந்து கொண்டனர்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com