தமிழகத்தில் நிகழ்ந்த யானைகளின் சாவு குறித்து விசாரணை நடத்த குழு அமைப்பு - அரசு உத்தரவு

தமிழகம் முழுவதும் கடந்த ஒரு ஆண்டில் நிகழ்ந்த யானைகளின் சாவு பற்றிய விசாரணை நடத்துவதற்கான குழுவை அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நிகழ்ந்த யானைகளின் சாவு குறித்து விசாரணை நடத்த குழு அமைப்பு - அரசு உத்தரவு
Published on

சென்னை,

தமிழகத்தில் பல்வேறு வனப்பகுதிகளில் யானைகள், யானைக்குட்டிகள் இறக்கும் துயர சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இது பொதுமக்களின் மனதில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ரெயில் மோதி இறப்பது, மின்வேலியில் சிக்கி இறப்பது, தந்தங்களுக்காக வேட்டையாடப்படுவது போன்ற காரணங்கள் இதில் அடங்கும். எனவே இயற்கையை மீறி யானைகளுக்கு சாவு நிகழ்வதற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

குழு அமைப்பு

இந்த நிலையில் தமிழக வனத்துறையின் முதன்மைத் தலைமை வனப்பாதுகாவலர், அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கடந்த ஒரு ஆண்டில் தமிழகத்தில் யானைகள், குறிப்பாக யானைக் குட்டிகள் இறந்த நிகழ்வுகளில் உள்ள உண்மைகளை ஆய்வு செய்வதற்காக, ஐ.எப்.எஸ். அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்படுகிறது.

அதன்படி, கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ஐ.அன்வர்தீன் அந்த குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருப்பார். வேலூர் வனத்துறை செயல் திட்ட அதிகாரி சி.எச்.பத்மா, துணை வனப்பாதுகாவலர் ஜே.ஆர்.சமர்தா (கட்டாய காத்திருப்பு) மற்றும் கே.காளிதாசன் (கோவை என்.ஜி.ஓ.) ஆகியோர் உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.

செயல் திட்ட அறிக்கை

இந்த குழு, யானைகள் இறந்த இடத்திற்கு நேரடியாக சென்று, சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு, யானை இறந்ததற்கான ஆதாரங்களை கண்டறிந்து, உண்மையை சரிபார்க்க வேண்டும்.

அதுதொடர்பாக அருகில் உள்ள மக்களுடன் உள்ளூர் கூட்டங்களை நடத்த வேண்டும். இயற்கைக்கு மாறாக நிகழும் யானை சாவுகளை தடுக்கும் நடவடிக்கைகள், யானைகளை கண்காணிக்கும் பணிகள் ஆகியவை பற்றி புதிய நடைமுறையை வகுக்க வேண்டும். அவைதொடர்பாக செயல் திட்ட அறிக்கை தயாரித்து அதை அரசுக்கு இந்த குழு சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com