

சென்னை,
சென்னை காசிமேடு முதல் எண்ணூர் வரையிலான கிழக்கு கடற்கரையின் பகுதியில் பிளாஸ்டிக் குப்பைகள், தெர்மாகோல் உள்ளிட்ட குப்பை கழிவுகள் அதிகமாக தேங்கி கிடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் வடசென்னையின் கடற்கரை பகுதிகள் பாதிக்கப்படும், கடல்வாழ் உயிரினங்கள் அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறி தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
பசுமைத் தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் சத்யகோபால் கோர்லபதி ஆகியோர் அமர்வின் விசாரணையில் சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதில் கிழக்கு கடற்கரை சாலையில் கடற்கரை பகுதியில் குப்பைகளை அகற்ற சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையில், மீனவர் நலத்துறை இயக்குனர், சென்னை துறைமுக பொறுப்பு கழக தலைவர், காசிமேடு மீன்பிடி துறைமுக மேலாளர் ஆகியோர் அடங்கிய தூய்மைப் பணிக்கான கூட்டுக்குழு அமைத்து உத்தரவிட்டது.
மேலும் மீன்பிடி தடைக்காலம் முடிவடையும் ஜூன் 14-ந் தேதிக்குள் முழுமையாக அகற்ற வேண்டும் எனவும், குப்பைகளை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து விசாரணையை ஜூன் மாதம் 3-ந்தேதிக்கு தள்ளி வைத்தும், இந்த நடவடிக்கைகள் செயல்படுத்தியது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சி ஆணையர் தலைமையிலான குழுவுக்கு உத்தரவிட்டது.