மதுரையில் பரபரப்பு: விசாரணைக்கு சென்று வந்த பூசாரி திடீர் மரணம்; போலீசார் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு

அய்யம்மாள் தரப்பில், முதல்-அமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டர், மாநகர போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோருக்கு புகார் மனு அனுப்பி உள்ளனர்.

மதுரையில் பரபரப்பு: விசாரணைக்கு சென்று வந்த பூசாரி திடீர் மரணம்; போலீசார் மீது உறவினர்கள் குற்றச்சாட்டு
Published on

மதுரை

மதுரையில் விசாரணைக்கு சென்று வந்த பூசாரி, போலீசார் தாக்கியதில் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மதுரை மேலஅனுப்பானடி ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 52). கோவில் பூசாரி. இவருடைய மனைவி அய்யம்மாள். இவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் வாகனங்களை நிறுத்துவது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த மாதம் இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் அய்யம்மாளுக்கு தலையில் காயம் ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனை தொடர்ந்து இரு தரப்பினரும், சிந்தாமணி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

திடீர் மரணம்

இந்தநிலையில் கடந்த மாதம் 19-ந்தேதி, போலீசார் விசாரணை செய்ய வேண்டும் என கூறி பரமசிவத்தை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது போலீசார் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து விசாரணை முடிந்து வீட்டிற்கு வந்த பரமசிவத்திற்கு தொடர்ச்சியாக வாந்தி, மயக்கம், தலைவலி ஏற்பட்டு அவதிப்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்தநிலையில் நேற்று காலை பரமசிவம் திடீரென உயிரிழந்தார்.

உறவினர்கள் புகார் மனு

இந்தநிலையில் உயிரிழப்பதற்கு முன்பு பரமசிவம் சில வீடியோக்களை எடுத்துள்ளார். அதில், போலீசார் தன்னை கடுமையாக தாக்கியதாகவும், அதனால் என் உயிருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால், என்னை தாக்கிய போலீசார்தான் காரணம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த வீடியோவில் கூறி இருந்தார்.

இதற்கிடையே, அய்யம்மாள் தரப்பில், முதல்-அமைச்சர் தனிப்பிரிவு, மாவட்ட கலெக்டர், மாநகர போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோருக்கும் புகார் மனு அனுப்பி உள்ளனர். அதில், பரமசிவம் மரணத்திற்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவரது உறவினர்கள் கூறுகையில், போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்றபோது, பரமசிவத்தை அவர்கள் கடுமையாக தாக்கி உள்ளனர். மேலும் ஷூ காலால் அவரது தலையில் கடுமையாக தாக்கினர். அதனால் அவர் அங்கேயே வாந்தி எடுத்து மயங்கினார். போலீசார் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். மேலும், போலீசார் தாக்கியது குறித்து வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது எனவும் எச்சரித்து அனுப்பி வைத்தனர். அவரது இறப்புக்கு காரணமான போலீசார் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கூறினர்.

ஆர்.டி.ஓ. விசாரணை

இதுகுறித்து போலீசார் கூறுகையில், போலீசார் தாக்கியதில் பரமசிவம் உயிரிழக்கவில்லை. அவருக்கு ஏற்கனவே, உடல்நல பாதிப்பு உள்ளது. இறப்பதற்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோக்களை, அவரது குடும்பத்தினர் அவர் இறந்த பின்னர் வெளியிட்டுள்ளனர்.

அவர் இறப்புக்கான உண்மையான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவரும். மேலும், போலீஸ் அதிகாரிகள் மீது அவர்கள் புகார் அளித்துள்ளதால், ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது. விசாரணையின் முடிவில்தான் அவரது இறப்பு குறித்து முழுவிவரம் தெரியவரும் என்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com