கயத்தாறு அருகே பரபரப்பு.. வடமாநில லாரிகளை சிறைபிடித்த தமிழக லாரி உரிமையாளர்கள்: என்ன நடந்தது..?

தமிழக லாரி உரிமையாளர் சங்கத்தினர் 70-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து அந்த லாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.
கயத்தாறு அருகே பரபரப்பு.. வடமாநில லாரிகளை சிறைபிடித்த தமிழக லாரி உரிமையாளர்கள்: என்ன நடந்தது..?
Published on: 

கயத்தாறு,

கயத்தாறு அருகே உள்ளூர் 'சோலார்' ஆலையில் இருந்து பொருட்களை ஏற்றிச்சென்ற வடமாநில லாரிகளை தமிழக லாரி உரிமையாளர்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

'சோலார்' பொருட்கள்

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியில் உள்ள சிப்காட்டில் 'சோலார்' பொருட்கள் உற்பத்தி செய்யும் டாடா நிறுவனத்துக்கு சொந்தமான ஆலை உள்ளது. இங்கிருந்து கன்டெய்னர் லாரிகள் மூலமாக தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு 'சோலார்' பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

இதற்காக தமிழக லாரிகளை பயன்படுத்த வேண்டும் என்று லாரி உரிமையாளர் சங்கத்தினர் வலியுறுத்துகின்றனர். ஆனால், அதனை புறந்தள்ளிவிட்டு வடமாநில லாரிகளையும், வடமாநிலங்களை சேர்ந்த லாரி புக்கிங் ஏஜென்சிகளையும் பயன்படுத்தி வருவதாக தமிழக லாரி உரிமையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

7 கன்டெய்னர் லாரிகள்

நேற்று முன்தினம் இரவு டாடா ஆலையில் இருந்து மதுரைக்கு 'சோலார்' பொருட்களை ஏற்றிக்கொண்டு வடமாநிலத்தை சேர்ந்த 7 கன்டெய்னர் லாரிகள் சென்று கொண்டிருந்தன.

இந்த லாரிகள் கயத்தாறு சுங்கச்சாவடி அருகே வந்தபோது 'இ-வாகன் சேவை' அமைப்பினர் எனப்படும் தமிழக லாரி உரிமையாளர் சங்கத்தினர் 70-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து அந்த லாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் கோவில்பட்டி வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

எந்த விதத்தில் நியாயம்?

இதுகுறித்து 'இ-வாகன் சேவை' அமைப்பின் தலைவர் கணேஷ்குமார் கூறுகையில், “டாடா 'சோலார்' ஆலையில் இருந்து வெளி மாநிலங்களுக்கு மட்டுமல்லாது, தற்போது தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் பொருட்களை அனுப்ப வடமாநில லாரிகளையே பயன்படுத்தி வருகின்றனர். தமிழகத்தில் தொழில் செய்துவிட்டு, அரசின் அனைத்து சலுகைகளையும் பெற்றுவிட்டு, தமிழகத்தை சேர்ந்த லாரிகளை பயன்படுத்தாமல், வடமாநில லாரிகளை பயன்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்?. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

இதுகுறித்து வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், “விதிமுறைகளை மீறியது குறித்தும், ஆவணங்கள் குறித்தும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com