

சென்னை,
தேர்தல் வெற்றி தோல்விகளில் கம்யூனிஸ்டுகளை தேடக்கூடாது என்று இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம், தாராபுரத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சிகள் தனித்து போட்டியிட்டன. தவெக அரசுக்கு ஆதரவு அளித்து வரும் கம்யூனிஸ்டுகள் இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட்டன. இதில் மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும், தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்டும் போட்டிட்டன. ஆனால், தேர்தலில் இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் டெபாசிட் இழந்தன. அதன்படி, மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் 1,986 வாக்குகளையும், தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் 1,157 வாக்குகளையும் பெற்று படுதோல்வியடைந்தனர்.
இந்நிலையில், இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சிகள் படுதோல்வியடைந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இடைத்தேர்தல் தோல்வி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த மு.வீரபாண்டியன் கூறுகையில், இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டுகள் போட்டியிட்டோம். நாங்கள் 1,000 அல்லது 1,500 வாக்குகளை பெற்ற உடன் இடதுசாரிகளுக்கு இவ்வளவுதான் பலமா என்கிறார்கள். சட்டமன்றத்தில் 234 தொகுதிகளில் இதுபோன்று 10 அல்லது 12 தொகுதிகளில் குறைவான வாக்குகளை பெற முடியும். சில இடங்களில் இடைநிலை வாக்குகளையும், சில இடங்களில் பெரிய கட்சிகள் பெரும் வாக்குகளையும் பெற முடியும். அதற்கான தளங்கள் கம்யூனிஸ்டுகளிடம் உள்ளது. கம்யூனிஸ்டுகளுக்கு சில பலவீனமான இடங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் நாங்கள் இப்போது போட்டியிட்ட இடங்கள்.
இதனால் சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் வெற்றி தோல்விகளில் கம்யூனிஸ்டுகளை தேடக்கூடாது. துணை ராணுவத்தை நிறுத்தினாலும் ஜனநாயகத்திற்கான கொடி பறக்கும் இடத்தில் கம்யூனிஸ்டுகளை தேட வேண்டும். ஈரான் மீது அமெரிக்கா குண்டு வீசுகிறது. பீகாரில், சென்னையில் ஏதோ ஒரு இடத்தில் அந்த போர் கூடாது என்று குரல் எழுப்புகிறோம் அங்கு கம்யூனிஸ்டுகளை தேட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.