முதல்-அமைச்சர் விஜய்க்கும், புதிய அரசுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து

முந்தைய அரசின் நலத் திட்டங்களை முன்னெடுத்து செல்வதிலும் வெற்றி பெற வேண்டும் என மு.வீரபாண்டிய தெரிவித்துள்ளார்.
முதல்-அமைச்சர் விஜய்க்கும், புதிய அரசுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து
Published on

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் மதச்சார்பற்ற, சமூக நீதி திசை வழியில் ஆட்சி அமைய வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்தும் வகையில் தீர்ப்பளித்துள்ளனர்.

இந்த முறையில் தமிழக வெற்றிக் கழகத்தை தனிப் பெரும் கட்சியாக தேர்வு செய்துள்ளனர்.

மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்து ஆட்சி அமைக்க அழைக்க வேண்டிய கவர்னரும், மத்திய அரசின் உள்துறை அமைச்சகமும் ,அமைச்சரும் திரை மறைவு வேலைகளில் ஈடுபட்டு, குறுக்கு வழியில் அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டது நாடறிந்த செய்தியாகும்.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கம்யூனிஸ்டு கட்சிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஒருங்கிணைந்து, மதவாத சக்திகளின் சந்தர்ப்பவாத அரசியலை முறியடித்து தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்தன.

இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் இணைந்து கொண்டது.

தமிழக மக்களின் மதச்சார்பற்ற, வேற்றுமையில் ஒற்றுமை பேணும் கொள்கை வழியில் நின்று, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும்.

அதிகாரக் குவிப்புக்கு எதிராகவும் மாநில உரிமைகளை நிலைநாட்டும் வகையிலான அரசாகவும் புதிய அரசு செயல்பட வேண்டும் என வாழ்த்துகிறோம்.

புதிய அரசுக்கு தலைமை ஏற்றுள்ள முதல்-அமைச்சர்

சி .ஜோசப் விஜய்யின் சீரிய தலைமை , அதன் தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும், முந்தைய அரசின் நலத் திட்டங்களை முன்னெடுத்து செல்வதிலும் வெற்றி பெற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின்  சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com