

சென்னை,
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, உடல் நல பரிசோதனைகளுக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
“இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் டி.ராஜாவுக்கு உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது. அவர் முழு உடல் பரிசோதனைக்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல் நலத்துடன் உள்ளார்.
கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், டி.ராஜா அவர்களின் மகளும் தேசியக் குழு உறுப்பினருமான அபராஜிதா, மாநிலக் குழு உறுப்பினர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி, உள்ளிட்டோர் உடன் இருந்து உதவி வருகின்றனர்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் ஆகியோர் மருத்துவமனைக்கு வருகை தந்து தோழர் டி.ராஜாவிடம் உடல் நலம் விசாரித்து சென்றனர்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.