துணை ஜனாதிபதியின் பேச்சுக்கு இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கண்டனம்

கவர்னர், சில மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்து விட்டு, அவரது கைகளை சானிடைசர் போட்டு துடைத்துக் கொண்டார்.
துணை ஜனாதிபதியின் பேச்சுக்கு இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கண்டனம்
Published on

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்கள் மீது அரசியலமைப்புச் சட்டத்தின் படி, முடிவு எடுக்காமல், அவைகளை கிடப்பில் போடப்பட்டு, மக்கள் நலன்களை புறக்கணித்து வந்தார்.

தமிழ்நாடு கவர்னரின் அத்துமீறிய செயல்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டு, கவர்னரின் அத்துமீறல்கள் மீது நியாயம் வழங்க கோரியது.

தமிழ்நாடு அரசின் மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தமிழ்நாடு கவர்னர், சட்டப் பேரவை நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை கால எல்லையில்லாமல் கிடப்பில் போட்டது சட்ட விரோதம் என மிகத் தெளிவாக கூறியுள்ளது.

கவர்னர், சில மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்து விட்டு, அவரது கைகளை சானிடைசர் போட்டு துடைத்துக் கொண்டார்.

தமிழ்நாடு கவர்னரின் அதிகார அத்துமீறல் குறித்து ஜனாதிபதியிடம் நேரில் விரிவான புகார் மனு வழங்கப்பட்டது.

ஆர்.என் ரவி, கவர்னர் பொறுப்புக்கு தகுதியற்றவர் என்பதற்கான ஆதாரங்களும், தரவுகளும் வழங்கப்பட்டன. இதன் மீது ஜனாதிபதி போதுமான அக்கறை காட்டி, நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை துணை ஜனாதிபதி , தனக்கு வசதியாக மறந்து விட்டார். ஜனாதிபதி அமைதி காத்து வந்ததால், தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் முறையிட வேண்டிய நிலை ஏற்பட்டது என்பதே உண்மையாகும்.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றிய ஆரம்ப நிலையில் இருந்து, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு வழங்கும் வரை மசோதாக்களின் உயிர் நிலை தொடர்ந்து நீடித்து வரும் என்பதை கற்றறிந்த கனவான் துணை ஜனாதிபதி நன்கறிவார். எனினும், அவர், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு ஜனநாயக சக்திகள் மீதான "அணு ஏவுகணையாக" பிரயோகித்துள்ளது என கூறியிருப்பது சரியல்ல.

கவர்னரின் சட்டவிரோத செயல்களுக்கு, ஜனாதிபதி மவுன சாட்சியாக இருந்து விடக் கூடாது என்ற நல்லெண்ணத்தில் ஜனாதிபதியின் அரசியல் சாசன கடமைகளை நினைவூட்டி, அவைகளை நிறைவேற்ற கால வரம்பு நிர்ணயித்திருப்பது அரசியலமைப்பு பாதுகாப்புக்கான அரணாகவே அமைந்திருக்கிறது என்பதை துணை ஜனாதிபதி பிடிவாதமாக நிராகரித்து விட்டு, சுப்ரீம் கோர்ட்டிற்கும், நீதித்துறைக்கும் எதிராகப் பேசியிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது' என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com