அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.75 ஆயிரம் பயிர் கடன் ரத்து: இந்திய கம்யூனிஸ்டு கட்சி வரவேற்பு

பேச்சுவார்த்தையில் சிறு, குறு மற்றும் பெரிய விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.75 ஆயிரம் பயிர் கடன் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.75 ஆயிரம் பயிர் கடன் ரத்து:  இந்திய கம்யூனிஸ்டு கட்சி வரவேற்பு
Published on: 

சென்னை

அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.75 ஆயிரம் பயிர் கடன் ரத்து என்ற அறிவிப்புக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி வரவேற்பு தெரிவித்து உள்ளது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் விடப்பட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் பெற்ற பயிர் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். புதிய கடன்களை நிபந்தனையின்றி வழங்க வேண்டும். மாநிலம் முழுவதும் ஏற்பட்டுள்ள சாகுபடி பாதிப்பிற்கு உரிய நிவாரணமும், வேலை இழந்துள்ள விவசாய தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணமும் வழங்கிட வேண்டும்.

விவசாயிகள் போராட்டம்

டெல்டா மாவட்டங்களில் சாகுபடிக்கு தேவையான நீரை தொடர்ந்து திறந்து விட வேண்டும். உச்ச நீதிமன்ற இறுதி தீர்ப்பின்படி காவிரி நீரை பெற தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மறியல் போராட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு, அனைத்து விவசாயிகள் சங்கங்களின் தலைவர்களை இன்று பேச்சுவார்த்தைக்கு அழைத்து பேசியது.

பயிர் கடன் ரத்து

இதில் எட்டு அமைச்சர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் சிறு, குறு மற்றும் பெரிய விவசாயிகள் உட்பட அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.75 ஆயிரம் பயிர் கடன் ரத்து செய்யப்படும் என அரசுத்தரப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வரவேற்கிறது.

விவசாயிகளின் இதர கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டுமென இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது என்று தெரிவித்து உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com