பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் இணைந்து ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி இணைந்து தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளன.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் இணைந்து ஆர்ப்பாட்டம்
Published on

மக்கள் துயர் போக்கும் கோரிக்கைகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், என்.கே.நடராஜன் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கொரோனா பாதிப்பு உள்ள இந்த நெருக்கடியான காலத்தில் மக்கள் துயரம் போக்கும் கோரிக்கைகளை முன்வைத்து இடதுசாரி கட்சிகள் கடந்த 16-ந் தேதி முதல் இருவார கால நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக இடதுசாரி கட்சிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஒருங்கிணைந்து 28-ந் தேதி (இன்று) முதல் 30-ந் தேதி வரையிலான 3 நாட்கள் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மையங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தவுள்ளன.

ஆதரிக்க வேண்டும்

கட்டுக்கு அடங்காமல் அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை கட்டுப்படுத்தி, 2014 முதல் உயர்த்தப்பட்ட கலால் வரிகளை பெருமளவு குறைத்து, விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும். கொரோனா பரவல் தடுப்பு மருத்துகள் உள்பட உயிர் காக்கும் மருந்துகளின் கள்ள வணிகத்தை தடுத்து, நியாய விலையில் மக்களுக்கு தட்டுப்பாடின்றி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். செங்கல்பட்டு தடுப்பு மருந்துகள் உற்பத்தி வளாகத்தை தமிழக அரசிடம் தாமதமின்றி வழங்க வேண்டும்.

தமிழக மக்கள் தொகைக்கு ஏற்ப, போதுமான தடுப்பூசி மருந்துகளும், பேரிடர் கால நிவாரண நிதியும் வழங்கவேண்டும். அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். தொழில் முடக்கம், வேலையிழப்பு, வேலையின்மை மற்றும் வருமானத்துக்கு வழியில்லாத காரணங்களால் வாழ்வாதாரம் இழந்துள்ள குடும்பங்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரத்து 500 வீதம் அடுத்த 6 மாதங்களுக்கு வழங்க வேண்டும். மத்திய உணவுத் தொகுப்பில் இருந்து நபருக்கு தலா 10 கிலோ வீதம் உணவு தானியங்கள் விலையில்லாமல் வழங்கவேண்டும். இந்த கோரிக்கைகளை முன்வைத்து இடதுசாரி கட்சிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஒருங்கிணைந்து நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்று ஆதரிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com